விஜய் அரசியல் என்ட்ரி: டிடிவி தினகரன் பரபரப்பு கருத்து! 2026 தேர்தலில் மாஸ் காட்டும் விஜய்?
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தாக்கத்தை ஏற்படுத்தினாரோ அதேபோல் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க தலைவர் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார்

தஞ்சாவூர்: 2006ம் ஆண்டு தேர்தலில் விஜயகாந்த் ஏற்படுத்திய தாக்கத்தை போல் 2026ல் தவெக விஜய் அனைத்து கட்சிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்துவார். இது எதார்த்தமான உண்மை என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் இன்று அ.ம.மு.க நிர்வாகி இல்லத் திருமணத்தை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நடத்தி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
நான் முதலமைச்சராக இருந்தபோதுதான் மத்திய அரசிடம் பேசி தமிழகத்தில் பல மருத்துவ கல்லூரிகளை உருவாக்கினேன். ஜெயலலிதாவால் கூட அது முடியாமல் போனது என எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்து எனக்கு தெரியாது. ஒருவேளை அவர் அப்படி பேசி இருக்கும் பட்சத்தில் அதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஜெயலலிதா தலைமையில் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடந்து வந்தது. அவர் ஏழை, எளிய, அடித்தட்டு உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்காகவும் ஏராளமான நல்ல திட்டங்களை கொண்டு வந்தார்.
தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடத்தினார். அவர் பற்றி யார் தவறாக பேசினாலும் அதை நான் வன்மையாக கண்டிப்பேன். 2006 சட்டமன்றத் தேர்தலில் எப்படி தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தாக்கத்தை ஏற்படுத்தினாரோ அதேபோல் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க தலைவர் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என நினைக்கிறேன். ஏனென்றால் பல இடங்களில் எடுக்கப்பட்ட சர்வேக்களின் அடிப்படையில் நான் இதனை கூறுகிறேன். அந்த அறிக்கையின் படி விஜய்யின் அரசியல் பிரவேசம் பல்வேறு கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது எதார்த்தமான உண்மை. இதற்காக நான் அவருடன் கூட்டணிக்கு செல்வேன் என்று எண்ணி விட வேண்டாம். நான் எப்போதும் எதார்த்தமாகத்தான் பேசுவேன்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 75 ஆண்டு கட்சிக்கும், 50 ஆண்டுகால கட்சிக்கும் இணையாக இருக்கிறது. எனவே நாங்கள் ஒன்றிணைய வேண்டும் என்பது எங்களுக்கு இல்லை. எங்களது இயக்கத்தை பலப்படுத்த தான் கவனம் செலுத்துகிறோம். அம்மாவின் தொண்டர்கள் ஓரணியில் இணைந்து தேர்தலை சந்தித்தால்தான் வெற்றி பெறுவோம் என்பதை கூறி வருகிறோம். வரும் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உறுதியாக முத்திரை பதிக்கும்.
ஓ. பன்னீர்செல்வம் வேறு வழி இல்லாமல் கூட்டணியை விட்டு வெளியே சென்றார். இருந்தாலும் அவரை சமாதானப்படுத்தி கூட்டணிக்கு அழைத்து வர டெல்லி தலைவர்கள் முயற்சி செய்ய வேண்டும் என்பது எனது கருத்து.
அமமுக தொடங்கி 8 ஆண்டுகள் முடிந்து 9-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம். பல்வேறு தேர்தல்களை சந்தித்துள்ளோம். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 3-வது முறையாக மீண்டும் பிரதமராக மோடி வந்தால் இந்தியா வளர்ச்சி பெறும் என்று கருதி எந்தவித நிபந்தனையும் இல்லாமல் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சென்றோம். தற்போதும் அந்தக் கூட்டணியில்தான் உள்ளோம். தற்போது தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து தேர்தலுக்கு தயார்படுத்தி வருகிறோம். தொண்டர்களும் மிகவும் உற்சாகத்துடன் தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மாநில துணை பொதுச்செயலாளர் ரெங்கசாமி, மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வேலு கார்த்திகேயன், திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ். காமராஜ், தஞ்சாவூர் மாநகர் மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.





















