Fire Accident : திருச்சியை சூழ்ந்த புகை மண்டலம்... அதிரசெய்த தீவிபத்து: பல லட்சம் பொருட்கள் சாம்பல்
Trichy : குடோனுக்குள் தீப்பிடித்ததை அறிந்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தொடர்ந்து திருவெறும்பூர் மற்றும் திருச்சி ஆகிய தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்: திருச்சி அரியமங்கலத்தில் 2 பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. மூன்று மணிநேர கடும் போராட்டத்திற்கு பின்னர் தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
திருச்சி மாவட்டம் அரியமங்கலம் கணபதி நகரில் ஏராளமான குடோன்கள், தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. எப்போதும் போக்குவரத்து நெரிசல் இப்பகுதியில் இருக்கும். இந்நிலையில் இங்கு ஆரோக்கியராஜ் என்பவருக்கு சொந்தமான பழைய பிளாஸ்டிக் குடோன் ஒன்று உள்ளது. இந்த குடோனில் பழைய பிளாஸ்டிக்கை தூளாக்கி அதனை மறுசுழற்சி செய்து வருகின்றனர். இந்த குடோனில் வேலை பார்க்கும் பணியாட்கள் வேலைக்கு வராததால் குடோன் பூட்டப்பட்டு இருந்துள்ளது.
திடீரென பற்றிய தீ:
இந்நிலையில் இன்று மதியம் 1:30 மணி அளவில் குடோனில் இருந்து சிறிது, சிறிதாக புகை வந்துள்ளது. சற்று நேரத்தில் புகை அதிகரிக்கவே அச்சமடைந்த அக்கம்பக்கத்தினர் உடன் இதுகுறித்து குடோன் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த அவர் குடோனுக்குள் தீப்பிடித்ததை அறிந்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதனை தொடர்ந்து திருவெறும்பூர் மற்றும் திருச்சி ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மளமளவென பரவிய தீ:
இதற்கிடையில் காற்று வேகம் அதிகமாக இருந்ததாலும், பிளாஸ்டிக் துகள்கள் மளமளவென தீப்பற்றியதால் தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் வெகுவாக போராடும் நிலை ஏற்பட்டது. இந்த தீவிபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் பெரும் புகை மூட்டமாக காணப்பட்டது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருந்த நிலையில் அருகில் உள்ள சரவணன் என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்கள் குடோனிலும் தீப்பற்றி எரிந்தது. இதனை தொடர்ந்து திருச்சி கண்டோன்மென்ட், திருவெறும்பூர், பெல், ஸ்ரீரங்கம், சமயபுரம், நவல்பட்டு ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து 7 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.
இதையும் படிங்க: Alagiri - Stalin: முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்த சகோதரர் மு.க.அழகிரி..அதிரும் திமுக.!
போராடி அணைக்கப்பட்ட தீ:
மேலும் மாநகராட்சி லாரிகள் மூலம் தண்ணீர் வரவழைக்கப்பட்டு மூன்று மணி நேரமாக போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அரியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீ விபத்து குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இரு குடோனிலும் தீப்பற்றி எரிந்த பொருட்களின் சேதம் மதிப்பு சுமார் ரூ.5 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட இந்த தீ விபத்து சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த புகை மண்டலத்தால் முதியவர்கள் பெரம் அவதிக்குள்ளாகினர்.