தஞ்சாவூர்: ஹேப்பி பர்த்டே... என தஞ்சை ரயில் நிலையத்தில் நேற்று இரவு எழுந்த சத்தமும், பயணிகளின் கைத்தட்டலும் யாருக்காக தெரியுங்களா?
தஞ்சாவூரிலிருந்து மெயின் லைன் வழியாக மீட்டர் கேஜ் பாதையில் சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில், அகல ரயில் பாதையாக மாற்றம் செய்யும் பணி தொடங்கியதும் அந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதையடுத்து மெயின் லைன் அகல ரயில் பாதையாக மாற்றம் செய்யப்பட்ட பின்னர் சென்னைக்கு ரயில் இயக்கப்படவில்லை.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்ட ரயில் பயணிகள், பொதுமக்கள் தன்னார்வ அமைப்பினர் என பல தரப்பினரும் புதிய ரயில் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதன் அடிப்படையில் கடந்த 2013 ம் ஆண்டு செப்.1ம் தேதி தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு உழவன் விரைவு ரயில் என்ற பெயரில் புதிய ரயில் சேவை தொடங்கப்பட்டது.
இந்த ரயில் தொடங்கப்பட்ட நாள் முதல் தினமும் முன்பதிவு பெட்டிகளில் இருக்கைகளும், படுக்கை வசதிகளும் நிரம்பியே வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 2013-ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி சென்னை எழும்பூர் மற்றும் தஞ்சாவூர் இடையே தொடங்கப்பட்ட இந்த ரயில், நாள்தோறும் இயக்கப்பட்டு, பயணிகளின் உயிரோட்டமான தேவையைப் பூர்த்தி செய்து வருகிறது. இந்த ரயில் பயணிகளின் மனதோடு ஒன்றிய ஒன்றாகும் என்றால் மிகையில்லை.இந்த ரயிலுக்குதான் நேற்று 12-வது பிறந்தநாள். இதைதான் பயணிகள் நேற்று இரவு கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
'உழவன்' என்ற பெயர், தஞ்சாவூர் மாவட்டத்தின் விவசாயப் பாரம்பரியத்தைக் குறிக்கிறது. இது வெறும் பெயரல்ல, மாறாக, உழவுத் தொழிலின் முக்கியத்துவத்தையும், தஞ்சையின் வளமான மண்ணையும் நினைவூட்டும் ஒரு குறியீடு. சேற்றை மிதித்து இயற்கையோடு போராடி உழவுத் தொழிலை மேற்கொள்ளும் விவசாயி என்பவரை தான் உழவர் என்கிறோம். அந்த பெயரைதான் இந்த ரயிலுக்கு வைத்தனர். இதனாலும் மக்களின் மனதுடன் இந்த ரயில் நெருக்கமாகி விட்டது.
பயணிகளுக்கும், இந்த ரயிலுக்கும் இடையேயான பந்தம் மிகவும் ஆழமானது. பல்வேறு வேலைகளுக்கும், கல்விக்கும், மருத்துவத் தேவைகளுக்கும் சென்னை செல்லும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த ரயிலை நம்பி இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி, சென்னையைச் சேர்ந்த பலர் தஞ்சாவூர் வந்து செல்வதற்கும் இது ஒரு வசதியான வழியாக விளங்குகிறது.
அன்றாடம் உழவன் விரைவு ரயிலில் பயணம் செய்யும் தஞ்சை மக்கள், இந்த ரயிலை வெறும் பயணத்திற்கான ஊடகமாக பார்க்கவில்லை, மாறாக தங்களின் கலாச்சாரத்தையும், வாழ்க்கையையும் சென்னையுடன் இணைக்கும் ஒரு அத்தியாவசியப் பாலமாகவே கருதுகிறார்கள்.
இந்த ரயில், தஞ்சாவூர் மற்றும் சென்னையின் மக்கள், கலாச்சாரம், மற்றும் பொருளாதாரத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றி வருகிறது. தஞ்சையின் விவசாயப் பெருமையையும், அதன் மக்களின் நம்பிக்கையையும் தாங்கிச் செல்லும் இந்த ‘உழவன்’, தொடர்ந்து தனது சேவையை மக்களுக்கு வழங்கி வருகிறது. நேற்று உழவன் விரைவு ரயிலின் சேவையை போற்றும் விதமாக கேக் வெட்டியும், உழவன் ரயிலின் ஓட்டுநர்களுக்கு போன்னாடை போர்த்தியும், ரயில் பயணிகளுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டன.
இதில் தஞ்சாவூர் ரயில் உபயோகிப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். நெகிழ்ச்சியான இந்த கொண்டாட்டம் தஞ்சை மக்கள் மத்தியில் வெகுவாக பேசப்பட்டு வருகிறது. தங்களின் பயணத்துடன் இணைந்த நண்பனே இந்த உழவன் என்று பயணிகள் நெகிழ்ச்சியாக தெரிவித்தனர்.