தஞ்சாவூர்: அவசரப்பட்டுட்டியேம்மா... என்று நேற்று தற்கொலை செய்து கொண்ட மகள் இன்றைய பிளஸ் 2 தேர்வில் 413 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளதை நினைத்து பாபநாசத்தை சேர்ந்த பெற்றோர் கதறி அழுது வருகின்றனர். மீளாத சோகத்தில் அவர்களை ஆழ்த்தி தன் உயிரை மாய்த்து கொண்ட ஆர்த்திகா அட்டகாசமான மதிப்பெண் எடுத்துள்ளார் என்பதுதான் வேதனை.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில் பிளஸ் டூ தேர்வில் தான் தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட மாணவி 413 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், படுகை புதுத் தெருவை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. விவசாயி. இவரது மகள் ஆர்த்திகா (17). பாபநாசத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் +2 தேர்வு எழுதி இருந்தார். இந்த நிலையில் நேற்று மகளை காணாமல் அவரது பெற்றோர் தேடியுள்ளனர். அப்போது பெற்றோருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் வீட்டின் பின்புறம் உள்ள மாட்டுக்கொட்டகையில் ஆர்த்திகா துப்பட்டாவில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பின்னர், அவர்கள் ஆர்த்திகாவை பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஆர்த்திகா உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக பாபநாசம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் நாளை (இன்று) +2 ரிசல்ட் வெளியாவதையொட்டி, எங்கே தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் ஆர்த்திகா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதில் என்ன சோகம் என்றால் இன்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் ஆர்த்திகா தமிழில்- 72, ஆங்கிலத்தில் 48, இயற்பியலில் 65, வேதியியலில் 78, உயிரியலில் 70, விலங்கியலில் 80 என மொத்தம் 413 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி அடைந்துள்ளார். ஒரு நிமிடத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட ஆர்த்திகா ஒரு நாள் காத்திருந்தால் தான் வெற்றிப் பெற்றதை நினைத்து துள்ளி குதித்திருப்பாரோ. அச்சத்தில் அவசரப்பட்டு உயிரை மாய்ந்து கொண்டு விட்டார் ஆர்த்திகா என்பதுதான் வேதனையின் உச்சம்.