திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக எலுமிச்சைப் பழம் விலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு எலுமிச்சைப் பழம் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என விற்று வந்த நிலையில் தற்போது பத்து ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக பொதுமக்கள் எலுமிச்சைப் பழத்தின் விலையை கேட்டாலே வாங்காமல் சென்று விடுவதால் வியாபாரமும் குறைந்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

 

குறிப்பாக வெயில் காலங்களில் எலுமிச்சைப் பழத்தின் தேவை என்பது அதிகமாக இருக்கும். கோடையில் வெப்பத்தை தணிக்கும் குளிர்பானங்களில் எலுமிச்சை முக்கியமாக இருக்கிறது. மேலும் கோவில் திருவிழாக்கள் உணவகங்கள் என எலுமிச்சைப் பழத்தின் தேவை எப்போதும் இருக்கிறது. இந்த வகையில் எலுமிச்சம்பழம் தற்போது விலை அதிகரித்துள்ளதால் ஹோட்டல் உரிமையாளர்கள் பொதுமக்கள் வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர்.

 

குறிப்பாக திருவாரூர் கடைத் தெருவில் விற்கப்படும் எலுமிச்சை பழங்கள் திருச்சி ஈரோடு மட்டுமல்லாது நாகப்பட்டிணம் மாவட்டத்தில் உள்ள பரவை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகளிடம் வாங்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் இந்த வருடம் கடுமையான பனிப்பொழிவின் காரணமாக எலுமிச்சைப் பழ விளைச்சல் என்பது குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக விலை உயர்ந்துள்ளதாகவும் வரத்து குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அடுத்த இரண்டு மாதங்களில் எலுமிச்சை விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ரம்ஜான் நோண்பு  நேரங்களில் எலுமிச்சை பழத்தின் தேவை  அதிகமாக இருக்கும் என்னும் அந்த நேரத்தில் எலுமிச்சைப் பழத்தின் விலை 20 ரூபாய் விற்றால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

இதேபோன்று கடந்த சில மாதங்களாக சின்ன வெங்காயம் மற்றும் பல்லாரி வெங்காயத்தின் விலை ஏற்றம் இரக்கமாக இருந்து வந்தது. குறிப்பாக கடந்த இரண்டு மாதத்திற்கு முன்னர் ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் விலை 120 ரூபாயும் பல்லாரியின் விலை 100 ரூபாயும் விற்பனை ஆனது. இதனால் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தார்கள். இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயம் மற்றும் பல்லாரி விலை மிகவும் குறைந்துள்ளது. குறிப்பாக முதல் தரம் உள்ள பல்லாரி ஒரு கிலோ 40 ரூபாயும் இரண்டாம் தரம் உள்ள பல்லாரி 30 ரூபாயும் மூன்றாம் தரம் உள்ள பல்லாரி 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று சின்ன வெங்காயம் ஏற்கனவே 100 ரூபாய் விற்று வந்த நிலையில் தற்போது 40 ரூபாயிலிருந்து 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.



 

இந்த விலை குறைவுக்கு காரணம் பல்லாரி வரத்து அதிகரித்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக அண்டை மாநிலங்களான பூனே போன்ற மாநிலத்தில் இருந்து வெங்காயத்தின் வரத்து அதிகரித்துள்ளதாலும் மேலும் வெங்காயத்தை தேக்கி வைத்து விற்பனை செய்ய முடியாத காரணத்தினால் குறைந்த விலைக்கு தற்பொழுது விற்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வெங்காயத்தை உற்பத்தி செய்யக்கூடிய விவசாயிகள் கடும் விலை வீழ்ச்சியின் காரணமாக மிகுந்த வேதனை அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது