மருந்தக உரிமையாளர் தாக்கப்பட்ட விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார். தலைமறைவான மற்றொருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் கீழே வீதியை சேர்ந்த ரவிக்குமார் என்பவர் குடவாசல் கடைவீதியில் சூர்யா மெடிக்கல் என்கிற பெயரில் மருந்தகம் ஒன்றை நடத்தி வருகிறார். குடவாசல் அண்ணா தெற்கு வீதியை சேர்ந்த கே.பி.ஆர் செந்தில் என்பவர் அவரது கடையில் தினமும் மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் தூக்க மாத்திரை கேட்டு ரவிக்குமாரை தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மூன்றாம் தேதி இரவு ரவிக்குமாரின் மருந்தகத்திற்கு வந்த செந்தில் மற்றும் அவரது அண்ணன் மகன் இமயவரம்பன் ஆகியோர் ரவிக்குமாரை சரமாரியாக தாக்குகின்ற சிசிடிவி காட்சிகள் வெளியானது. இதுகுறித்து இரு தரப்பினரும் குடவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். ரவிக்குமார் தரப்பில் தன்னை செந்தில் தரப்பினர் கடுமையாக தாக்கியதில் மயக்கமடைந்ததாகவும் மேலும் கல்லாவில் உள்ள பணத்தை எடுத்துச் சென்றதாகவும் குடவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அதேபோன்று செந்தில் தரப்பில் சண்டையின் போது தனது தங்கச் செயினை பறித்துக் கொண்டதாகவும் வேறு மெடிக்கலில் மாத்திரை வாங்குவதால் தனது மெடிக்கலில் வாங்கவில்லை என்று ரவிக்குமார் தன்னை தரக்குறைவாக திட்டியதாகவும் புகார் அளித்திருந்தனர்.
இந்த இரு புகார்களின் அடிப்படையில் போலீசார் செந்தில் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அதேபோன்று மருந்தக உரிமையாளர் ரவிக்குமார் மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இருவரும் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதனையடுத்து திருவாரூர் தாலுகா மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் கே.பி.ஆர் செந்திலை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி தங்களது பணியை புறக்கணித்து திருவாரூரில் கண்டன கூட்டம் நடத்தினர். இதில் மருத்துவர்களுக்கு வழங்கப்படும் உரிய சட்டப் பாதுகாப்பு போன்று தங்களுக்கும் உரிய சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் செந்திலை உடனடியாக கைது செய்ய வேண்டும் இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபடுவது என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் கலந்து ஆலோசிக்கப்பட்டது. இதில் 200 க்கும் மேற்பட்ட மருந்தக உரிமையாளர்கள் மற்றும் வர்த்தக சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் மருந்தக உரிமையாளர் ரவிக்குமாரை சரமாரியாக தாக்கிய குடவாசல் அண்ணா தெற்கு வீதியைச் சேர்ந்த கே.பி.ஆர் செந்தில் என்பவரை தற்போது குடவாசல் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் இந்த வழக்கில் தொடர்புடைய செந்தில் உறவினரான இமய வரம்பனை கைது செய்ய வேண்டும் என ரவிக்குமார் தரப்பிலும் மருந்தக உரிமையாளர் சங்கத்திலும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்