நன்னிலம் அருகே சிறையில் இருந்து ஜாமினில் வந்து  ஒருவாரம் ஆன நிலையில் இளைஞர் வெட்டிப் படுகொலை. 


திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள மணவாளநல்லூர் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் 28 வயதான சந்தோஷ் குமார் என்பவர் கொலை வழக்கில் 2 மாதம் சிறைவாசம் அனுபவித்து விட்டு ஒரு வாரத்திற்கு முன்பு பிணையில் வெளியில் வந்துள்ளார். இந்த நிலையில் சந்தோஷ்குமார் தனது வீட்டிலிருந்து கடைத்தெருவிற்கு செல்வதற்காக நடந்து வந்து கொண்டிருந்த போது காரில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் சந்தோஷ் குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் சந்தோஷ்குமாரின் தலையில் பலத்த வெட்டு விழுந்துள்ளது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த சந்தோஷ் குமார் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 


கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மணவாளநல்லூர் திமுக ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் என்பவரை சந்தோஷ் உள்ளிட்ட 4 பேர் கொண்ட கும்பல் படுகொலை செய்தது.இந்த கொலை வழக்கில் கணேசன் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் சிறையில் இருந்து வந்து ஒரு வாரத்திற்குள் சந்தோஷ்குமார் கூலிப் படையினரால் கொலை செய்யப்பட்டிருப்பது இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 




ஊராட்சி மன்றத் தலைவர் கணேசன் கொலைக்கு பழிவாங்கும் விதமாக இந்த கொலை நடைபெற்றிருக்கலாம் என்கிற அடிப்படையில் எரவாஞ்சேரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் சந்தோஷ் குமாரின் உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். திருவாரூர் மாவட்டத்தில் சமீப காலமாக கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.குறிப்பாக பழிக்குப் பழி வாங்கும் விதமாக பல்வேறு கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.


அந்த வகையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நீடாமங்கலம் கடைத்தெருவில் பட்ட பகலில் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் முன் விரோதம் காரணமா வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கஞ்சா மற்றும் மது போதையின் காரணமாகவும் கொலை கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதே போன்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு காட்டூர் பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவர் ஏற்கனவே நடைபெற்ற கொலைக்கு பழிவாங்கும் விதமாக கொலை செய்யப்பட்டார்.ஒரு கொலைக்கு பழிவாங்கும் விதமாக அடுத்தடுத்து கொலைகள் நடைபெறுவது திருவாரூர் மாவட்டத்தில் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 




அதனை தடுக்கும் பொருட்டு தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென திருவாரூர் மாவட்ட காவல்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். குறிப்பாக திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக புதிதாக பொறுப்பேற்றுள்ள சுரேஷ்குமார் உரிய நடவடிக்கை எடுத்து தொடர்ந்து பழிக்கு பழிவாங்கும் வகையில் நடைபெறும் கொலைகளை தடுத்து நிறுத்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.