திருவாரூர் என்றால் நினைவுக்கு வருவது ஆழித்தேர், தியாகராஜா் கோவில் தான். தஞ்சையை அடுத்து விவசாயத்தை முதன்மையான தொழிலாக கொண்ட மாவட்டம் திருவாரூர் தான். திருவாரூரில் எங்கு பார்த்தாலும் வயல்வெளிகள் தான் கண்ணில் படும். இருப்பினும் புதிய, பழைய பஸ் நிலையம், ரெயில் நிலையம், அரசு துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் என ஏராளமான நிறுவனங்கள் உள்ளன. திருவாரூரில் நகராட்சி அலுவலகம் அருகே பழைய மருத்துவமனை தாலுகா மருத்துவமனையாக இயங்கி வந்தது. நகரின் மையப்பகுதியில் இருந்ததால் எந்த வித அவசர சிகிச்சைகளுக்கு பொதுமக்கள் உடனே சென்று சிகிச்சை பெற்று விடுவார்கள். தினமும் ஏராளமான வெளிநோயாளிகள் சிகிச்சை பெற்று செல்வார்கள். நகரத்தின் மையப்பகுதியில் இயங்கி வந்ததால் சிகிச்சைக்கு செல்ல பொதுமக்கள் சிரமமின்றி சென்று வந்தனர்.

 

தாலுகா மருத்துவமனையாக இருந்ததை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. அதன்பின்னர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தொடங்கப்பட்டு ஆட்சியர் அலுவலகம் அருகே பலகோடி செலவில் கட்டிடம் கட்டப்பட்டது. அதனை தொடர்ந்து பல ஆண்டுகளாக மாவட்ட மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக இயங்கி வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே இயங்கி வந்த பழைய மருத்துவமனை வளாகம் தற்போது உரிய பராமரிப்பின்றி காணப்படுகிறது. மேலும் செடி, கொடிகள் வளர்ந்து குறுங்காடு போல் காட்சி அளிக்கிறது. மருத்துவமனை கட்டிடங்கள் சேதமடைந்து, சிமெண்டு காரைகள் பெயர்ந்து பாழடைந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் அந்த வழியாக செல்லவே அச்சப்படுகின்றனர்.



 

சிலர் மருத்துவமனை வளாகத்தில் குப்பைகளை கொட்டி குப்பைகள் கொட்டும் இடமாக மாற்றி வருகின்றனர். செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுவதால் அந்த பகுதியில் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகளிவில் காணப்படுகிறது. மக்கள் நடமாட்டம் இல்லாததால் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் விளங்குகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், திருவாரூரில் காய்ச்சல் உள்ளிட்ட சிறு,சிறு சிகிச்சைகளுக்கு கூட பல கிலோ மீட்டர் தூரம் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்லவேண்டிய நிலை உள்ளது.

 

மேலும் நகரில் திடீரென்று ஏற்படும் விபத்துக்களின்போது அவசர சிகிச்சைக்கு கூட அங்கு தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மருத்துவக்கல்லூரிக்கு குறிப்பிட்ட நேரங்களுக்கு மட்டுமே பஸ்கள் இயக்கப்படுகின்றன. தனியார் வாகனங்களில் சென்றால் செலவுகள் அதிகம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரியநடவடிக்கை எடுத்து நகரின் உள்ளே பராமரிப்பின்றி உள்ள பழைய மருத்துவமனையை சீரமைத்து தாலுகா மருத்துவமனையாக அமைக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.