நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளரை முற்றுகையிட்டு அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட விவசாயிகள்..

திருவாரூர் மாவட்டம் என்பது முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பி உள்ள மாவட்டமாகும். இங்கு வசிக்கும் மக்களின் வாழ்வாதாரமாக விவசாயமும் கால்நடைகளும் இருந்து வருகிறது.பெரும்பாலும் இந்த மாவட்ட விவசாயிகள் சம்பா நெற்பயிற் சாகுபடிகளில் மட்டும் சமீப காலமாக ஈடுபட்டு வருகின்றனர். காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி பணிகளில் தீவிரமாக விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டு தோறும்காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசன வசதிக்காக ஜூன் 12ல் மேட்டூர் அணையில் இருந்தது தண்ணீர் திறந்து விடப்படும்.இந்த வருடம் 75 ஆண்டுகளுக்கு பிறகு மே 24 ல் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெற்பயிர் சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வந்தனர்.


மேலும் அக்டோபர் ஒன்றாம் தேதி திறக்கப்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இந்த வருடம் செப்டம்பர் ஒன்றாம் தேதியே திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 132 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.





தற்போது திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கான அறுவடை பணிகள் என்பது தொடங்கி நடைபெற்று வருகிறது.குறிப்பாக திருவாரூர் மாவட்டம் குடவாசல் பெரும்பண்ணையூர் புதுக்குடி மஞ்சக்குடி சேங்காலிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குறுவை சாகுபடி அறுவடை பணிகள் முழு மூச்சில் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் பெரும்பண்ணையூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பட்டியல் எழுத்தர் வராத காரணத்தினால் கடத்த பத்து நாட்களாக அறுவடை முடிந்து நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து விவசாயிகள் காத்திருப்பதால் நெல்மணிகளை சாலையில் கொட்டி போராட்டம் நடத்த விவசாயிகள் ஆயத்தமாகி வந்தனர். இந்த தகவல் அறிந்த திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன் நேரில் வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அந்த பகுதி விவசாயிகள் அவரிடம் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டனர்.




200 மூட்டை மட்டுமே தங்களிடம்  நெல் கொள்முதல் செய்யப்படுவதாகவும், அதற்கு மேல் எடுக்கப்படுவதில்லை எனவும் கூறினர். மேலும் ”பத்து நாட்களுக்கு மேலாக நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து காத்திருக்கிறோம். இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படவில்லை” என பல்வேறு கேள்விகளையும், குற்றச்சாட்டுகளையும் அடுக்கடுக்காக அவரிடம் கேட்டனர்.


அவர்களுக்கு பதில் அளித்த ராஜராஜன், ”சரியான ஈரப்பதத்தில் இருந்தால் 800 மூட்டைவரை விவசாயிகளிட்ம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படும் என்றும் மேலும் தன்னுடன் பட்டியல் எழுத்தர் ஒருவரை அழைத்து வந்துள்ளதாகவும், அவர் இங்கு பணியாற்றுவார்” என்றும் தெரிவித்தார்.


ஏற்கனவே இருந்த பட்டியல் எழுத்தர் பதவி உயர்வு பெற்று சென்றுவிட்டதால், இந்த பிரச்சனை ஏற்பட்டதாகவும் மேலும் பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக் கொள்வதாகவும்  தெரிவித்தார். இதனையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.