திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடந்த பல மாதங்களாக கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தல் சம்பவம் அதிகளவில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக நாகை காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கடத்தி வரப்பட்டு திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள ரயில்வே கேட் பகுதியில் தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த டெம்போ டிராவலர் வாகனத்தை மறித்து சோதனையிட்டனர். அதில் 21 சாக்கு மூட்டைகளில் சுமார் 912 கிலோ புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து வாகனத்தையும் குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்த தனிப்படை போலீசார் ஸ்ரீவாஞ்சியம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீராம் மற்றும் பரணிதரன் ஆகிய 2 பேரை கைது செய்து பேரளம் காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். பேரளம் காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் இரண்டு பேரும் நீடாமங்கலத்தில் வாடகை லோடு வாகன ஓட்டுநர்களாக பணியாற்றுவதும், தங்களுக்கு கரூரிலிருந்து தொலைபேசி மூலமாக அழைப்பு வந்து நீடாமங்கலத்தில் இருந்து கொல்லுமாங்குடி பகுதியில் செயல்பட்டு வரும் முகமது என்பவருக்கு சொந்தமான நேஷனல் மளிகை கடைக்கு குட்கா பொருட்களை ஏற்றிச் செல்ல வேண்டும் என தகவல் தெரிவிக்கப்பட்டது அதற்கு உரிய வாடகை தொகையை மட்டுமே நாங்கள் பெற்றுக் கொண்டோம் இதற்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளனர். மேலும் இருவரையும் நீடாமங்கலம் பகுதியில் குட்கா பொருட்களை கை மாற்றிய இடத்தை கண்டறிய காவல்துறையினர் நீடாமங்கலத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதன்படி குட்கா பொருட்கள் இடம் மாற்றப்பட்ட இடமும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் நீடாமங்கலத்தில் 321 கிலோ குட்கா இருந்துள்ளது தெரிய வந்தது அதனையடுத்து அதனையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்
தொடர் விசாரணைக்குப் பின்னர் ஸ்ரீராம் பரணிதரன் மற்றும் மளிகை கடை உரிமையாளர் முகமது உள்ளிட்ட 4 பேரை பேரளம் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் ஒருவர் தலைமறைவாகி உள்ளதாகவும் அவரை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களின் மதிப்பு 9 லட்சம் ரூபாய் என காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த கடத்தல் சம்பவத்தில் வேறு யாரேனும் தொடர்பில் உள்ளார்களா குட்கா வேறு எங்காவது பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் காவல் துறையினர் தங்களது விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் தமிழ்நாட்டில் குட்கா பான்மசாலா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையிலும் தொடர்ந்து விற்பனை என்பது நடைபெற்று வருவதால் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.