வாரண்டி காலத்திற்குள் பழுதடைந்த டிவியை மாற்றி தராத தனியார் நிறுவனம் மற்றும் தனியார் நிறுவனம் புது டிவியுடன் 60000 ரூபாய் அபராதமும் வழங்க வேண்டுமென திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

 

திருவாரூர் மாவட்டம் மேல திருப்பால்க்குடி வடக்குத் தெரு பகுதியைச் சேர்ந்த சுகுமார் என்பவரின் மனைவி பிரியா கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் மன்னார்குடி பெரிய கடைத் தெருவில் உள்ள பிரபல கடையில் வட்டி உட்பட ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சாம்சங் எல்இடி டிவி ஒன்றை 10,000 ரூபாய் முன்பணம் செலுத்தி தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் மாத 5000 ரூபாய் சுலப தவணையில் வாங்கியுள்ளார். இந்த நிலையில் அந்த டிவிக்கு இரண்டு வருட காலம் வாரண்டி கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இந்த டிவியின் டிஸ்ப்ளே பழுது அடைந்து விட்ட காரணத்தினால் இது குறித்து நிறுவனத்தை தொடர்பு கொண்டு பிரியா கேட்ட போது 50 ஆயிரம் ரூபாய் செலுத்தி டிஸ்ப்ளே மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறியதால் இது குறித்து வழக்கறிஞர் நோட்டீஸ் மூலமும் அந்த நிறுவனத்திடம் விளக்கம் கேட்டுள்ளார். இதற்கு உரிய பதில் வராத காரணத்தினால் கடந்த ஜூலை மாதம் திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.



 

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணைய நீதிபதி சேகர் மற்றும் உறுப்பினர் லட்சுமணன் அடங்கிய அமர்வு தொலைக்காட்சி பெட்டிக்கு வாரண்டி மற்றும் கியாரண்டி நடப்பில் இருந்து வரும் நிலையிலும்பெற்ற கடன் தொகைக்கு கூடுதலாக மாதம் தோறும் 500 ரூபாய் தொலைக்காட்சி பெட்டிக்கு முழு காப்பீடு செலுத்தியும் வருவதால் அதன் அடிப்படையில் தொலைக்காட்சி பெட்டியை சீர் செய்து தர புகார்தாரர் கேட்டு கொண்டும் தொலைக்காட்சி பெட்டியை சரி செய்து தரவில்லை. இதன்  மூலம் பழுதடைந்த  நிலையில் இருந்த தொலைக்காட்சி பெட்டியை மறைத்து  நிறுவனம் புகார் தாரருக்கு விற்பனை செய்தது தெரிய வருகிறது. மேலும் வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பபட்டும் அந்த அறிவிப்பை பெற்றுக்கொண்டு இது நாள் வரை எந்த ஒரு பதில் அறிவிப்பும் கொடுக்கவில்லை. மேலும் பாலிசி 31/5/2023 ல் இருந்து 30.05.2024 வரை நடப்பில் உள்ளது என்பதை இந்த ஆணையம் ஏற்றுக்கொள்கிறது என்றும் புகார்தாரர் முறையாக மாதா மாதம் பணம் செலுத்தியும் புகார்தாரர் தனக்கு எந்த ஒரு பாலிசிக்கான ரசீதும் இதுவரை எதுவும் கொடுக்காமல் மாத பணம் பிடிப்பது என்பது தெரிய வருகிறது.

 

எனவே இரு எதிர் தரப்பினருக்கும் இந்த இடத்தில் பொறுப்பும் கடமையும் உள்ளது என்பதையும்  மூன்றாம் நபர்  யாரும் பாலிசி எடுப்பது என்பது தெரிவிக்காமல் இருக்கும் போது இரண்டு எதிர் தரப்பினரும் புகார்தாரருக்கு தவறான வணிக நடவடிக்கையில் ஈடுபட்டு இழப்பை ஏற்படுத்தியுள்ளார்கள் என்பது மென்மேலும் தெரிய வருகிறது. எனவே மன்னார்குடி தனியார் நிறுவனம் மற்றும் தனியார் பைனான்ஸ் நிறுவனம் இருவரும் இணைந்து பழைய தொலைக்காட்சி பெட்டி எடுத்துக்கொண்டு அதே மாடல் கொண்ட வேறு ஒரு புதிய தொலைக்காட்சி பெட்டியை வழங்க வேண்டும் எனவும் மன உளைச்சலுக்கு 50,000 ரூபாயும் வழக்கு செலவு தொகையாக 10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட வேண்டும் என்றும் மனு  தாக்கல் செய்த நாள் முதல் 9 சதவீத வட்டியுடன் ஒரு மாத காலத்திற்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.