ஒரு வருடத்திற்குள் பழுதான டேப்பை சரி செய்து கொடுக்காத பூர்விகா மொபைல்ஸ் நிறுவனத்திற்கு 19,398 ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் குறை தீர் ஆணையம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் சீலத்தநல்லூர் பகுதியைச் சேர்ந்த குமணவள்ளல் என்பவர் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் தெற்கு கிழக்கு ராம்பார்ட் சாலையில் இயங்கி வரும் பூர்விகா மொபைல் பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனத்தில் கடந்த 29.07. 2021 அன்று பால் 4ஜி டேப்(Ball 4G Tab) ஒன்றை 10 ஆயிரத்து 398 ரூபாய் ரொக்கமாக கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளார்.மேலும் அந்த டேப்பிற்கு ஒரு வருடத்திற்கான இன்சூரன்ஸ் தொகையாக கூடுதலாக 999 ரூபாய் செலுத்தியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்த டேப்பின் பவர் பட்டனில் பிரச்சனை ஏற்பட்டு பழுது ஏற்பட்டுள்ளது.இது குறித்து குமணவள்ளல் தஞ்சாவூர் சென்று பூர்விகா மொபைல் நிறுவனத்தில் கேட்ட போது இதற்கான சர்வீஸ் சென்டர் தஞ்சாவூரில் இல்லை திருச்சியில் தான் இருக்கிறது என்று கூறியுள்ளனர்.அதனை நம்பி அவர் திருச்சி சென்று சர்வீஸ் சென்டரை தேடிய போது அங்கு இல்லை என்பது தெரிய வந்தது.இதனையடுத்து தஞ்சாவூர் பூர்விகா மொபைல்ஸ் மேலாளருக்கு குமணவள்ளல் இது
குறித்து கடந்த 24.12.2022 ல் வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பியுள்ளனர்.
இந்த வழக்கறிஞர் அறிப்பை 28.12.2022 ல் பெற்றுக் கொண்டு விட்டு பூர்விகா மொபைல் தரப்பு கடந்த எந்தவித பதிலும் கொடுக்கவில்லை என்றும் மேலும் அந்த டேப்பை சரி செய்து கொடுப்பதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.அதனைத் தொடர்ந்து கடந்த 17.2.2023 அன்று இது குறித்து குமணவள்ளல் திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் சக்கரவர்த்தி உறுப்பினர்கள் லட்சுமணன் பாக்கியலட்சுமி அடங்கிய அமர்வு புகார்தாரரின் அறிவிப்பை பெற்றவுடன் உரிய பதில் கூறியிருக்க வேண்டும் அல்லது அந்த டேப்பை பெற்றுக்கொண்டு சரி செய்து கொடுத்திருக்க வேண்டும் அல்லது அந்த டேப்பை எடுத்துக் கொண்டு புதிய டேப் வழங்கி இருக்க வேண்டும் அல்லது அவரிடம் டேப்பிற்காக பெற்ற தொகையை திருப்பி கொடுத்து இருக்க வேண்டும் ஆனால் எந்த விதமான சேவையும் செய்யாமலும் பதில் வழங்காமலும் எதிர்தரப்பினர் இருந்துள்ளது சேவை குறைபாடு என இந்த ஆணையம் கருதுகிறது.
மேலும் ஒரு வருட காலத்திற்குள் பழுது ஏற்பட்டால் அதனை சரி செய்வதற்காக கூடுதலாக இன்சூரன்ஸ் தொகையாக புகார்தாரர் 999 ரூபாய் செலுத்தியுள்ளார். அதனை கருத்தில் கொள்ளாமலும் முறையாக சர்வீஸ் சென்டர் இல்லாமல் டேப்பை விற்பனை செய்துள்ளது நேர்மையற்ற வணிக நடைமுறை மற்றும் சேவை குறைபாடு என இந்த ஆணையம் கருதுகிறது. எனவே புகார்தாரரிடமிருந்து பழைய டேப்பை பெற்றுக் கொண்டு அவரிடமிருந்து பெற்ற 11,398 ரூபாயை அவரிடம் திருப்பி வழங்க வேண்டும் என்றும் அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் மன கஷ்டத்திற்கு இழப்பீடாக 5000 ரூபாயும் வழக்கு செலவுத் தொகையாக 3000 ரூபாயும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. தீர்ப்பு வெளிவந்த நாளிலிருந்து இரண்டு மாத காலத்திற்குள் இந்த தொகையை வழங்க வேண்டும் என்று தவறும் பட்சத்தில் வழக்கு செலவு தொகை நீங்கலாக மீத தொகைக்கு 9 சதவீத வருட வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.