திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள அகஸ்தியம்பள்ளி இடையே ரயில் போக்குவரத்து கடந்த 20 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தொடங்க உள்ளது. தென்னிந்தியாவில் ரயில்வே துறை தொடங்கப்பட்ட தொடக்க காலத்தில் திருத்துறைப்பூண்டி அகஸ்தியம்பள்ளி இடையே மீட்டர் கேஜ் ரயில் பாதை போடப்பட்டது. நாடு முழுவதும் அகலப்பாதையாக மாற்றப்பட்டபோது நாட்டிலேயே கடைசி கட்டத்தில் பணிகள் நடைபெற்ற ரயில் பாதைகளில் இதுவும் ஒன்று. அந்த அடிப்படையில் திருத்துறைப்பூண்டி அகஸ்தியம்பள்ளி வழிதடத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு வரை மீட்டர் கேஜ் ரயில் பாதையில் ரயில்கள் இயக்கப்பட்டன அதன் பின்னர் அகலப்பாதை விரிவாக்க திட்டத்துக்காக ரூ.480 கோடியில் இந்த வழித்தடத்தில் அகலப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. 2011 ஆம் ஆண்டு முதல் பணிகள்  தொடங்கி கடந்த ஆண்டு இறுதியில் பணிகள் முடிக்கப்பட்டன. 



 

அனைத்து சோதனை ஓட்டங்களும் நடத்தப்பட்ட நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி தற்போது இந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்தை காணொலி  காட்சி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார். தினசரி காலை 6:00 மணிக்கு திருத்துறைப்பூண்டியில் இருந்து புறப்பட்டு 6.45க்கு அகஸ்த்தியம் பள்ளியையும், ஏழு மணிக்கு அகஸ்தியம்பள்ளியில் இருந்து புறப்பட்டு திருத்துறைப்பூண்டியையும், அதேபோல் மாலை 6:00 மணிக்கு திருத்துறைப்பூண்டியில் இருந்தும், மீண்டும் 7:00 மணிக்கு அகஸ்தியம்பள்ளியில் இருந்தும் இந்த ரயில் இயக்கப்படுகிறது. திருத்துறைப்பூண்டியில் இருந்து 37 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அகஸ்தியம்பள்ளிக்கு இடையில் குறவபுலம், நெய் விளக்கு, தோப்புத்துறை, வேதாரண்யம், அகத்தியம் பள்ளியில் ரயில்வே ஸ்டேஷன்கள் கட்டப்பட்டுள்ளன. 



 

இந்த வழித்தடத்தில் நான்கு பெரிய மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த வழித்தடத்தில் முதல் முறையாக ஆறு ரயில் பெட்டிகளுடன் கூடிய டெமு ரயில் இயக்கப்பட உள்ளது. திருத்துறைப்பூண்டி மற்றும் அகஸ்தியம்பள்ளி தவிர மற்ற அனைத்து ரயில் நிலையங்களிலும் டிக்கெட் விற்பனையை தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு நடைபெற உள்ளது. திருத்துறைப்பூண்டியில் இருந்து அகஸ்தியம்பள்ளிக்கு தினமும் இந்த டெமோ ரயிலானது காலை மாலை இரு வேலைகளிலும் இயக்கப்பட உள்ளது. அகஸ்தியம்பள்ளியில் இருந்து உப்பு ஏற்றுமதி கடந்த காலங்களில் நடைபெற்று வந்தது அந்த வகையில் எதிர்காலத்திலும் நடைபெறும் விதமாக பயணிகள் ரயில் மட்டும் தற்போதைய சமயம் துவக்கப்பட்டாலும் சரக்கு ரயில் வந்து செல்வதற்கான சரக்கு முனையம் இந்த ரயில் நிலையத்தில் கட்டப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.