திருக்கானூர்பட்டி ஜல்லிக்கட்டு... பாய்ந்து வந்த காளைகளை பிடித்து பரிசுகளை வென்ற வாலிபர்கள்
காயம் அடைந்த வீரர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருந்தது. ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்கான விதிமுறைகளை பின்பற்ற விழாக்குழுவினர் அறிவித்தனர்.

தஞ்சாவூர்: தஞ்சை அருகே திருக்கானூர்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் பாய்ச்சல் காட்டிய காளைகளை பாய்ந்து பிடித்து பல பரிசுகளை இளம் காளையர்கள் வென்றனர். பல காளைகள் பிடிபடாமல் சென்றன. இவற்றின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
தஞ்சை அருகே திருக்கானூர்பட்டியில் புனித அந்தோணியார் பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதற்காக வாடிவாசலில் இருந்து 100 மீட்டர் தூரம் வரை ஒரு அடி உயரத்திற்கு தென்னை நார்கள் பரப்பப்பட்டன. காளைகளும், வீரர்களுக்கும் கீழே விழுந்தாலும் காயம் ஏற்படாமல் இருக்கும் என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. காளைகள் பார்வையாளர் பகுதிக்குள் சென்று விடாமல் இருப்பதை தடுக்க தடுப்புகளும் அமைக்கப்பட்டு இருந்தது.

மாடு பிடி வீரர்களை களத்துக்குள் அனுப்புவதற்கு தனி பாதை அமைக்கப்பட்டு இருந்தது. காயம் அடைந்த வீரர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருந்தது. ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்கான விதிமுறைகளை பின்பற்ற விழாக்குழுவினர் அறிவித்தனர். இதன்படி ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாட்டுடன் உரிமையாளர் மற்றும் மாடுபிடி வீரர்கள் இணையத்தில் தங்களை பற்றி பதிவு செய்து கொண்டனர்.
இந்த ஜல்லிக்கட்டில் 750 காளைகள் பதிவு செய்யப்பட்டன. கால்நடை பராமரிப்பு துறை குழுவினர் உரிய சோதனைகளை மேற்கொண்டனர். மேலும் 400 மாடுபிடி வீரர்கள் தங்களின் பெயரை பதிவு செய்திருந்தனர். இந்த வீரர்களுக்கும் மருத்துவ சோதனைக்ள செய்யப்பட்டன. மாடுபிடி வீரர்கள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு களம் இறக்கப்பட்டனர்.
ஜல்லிக்கட்டு போட்டியை காலை 7 மணியளவில் தஞ்சை கோட்டாட்சியர் நித்யா தொடக்கி வைத்தார். தாசில்தார் சிவக்குமார், வல்லம் டிஎஸ்பி காயத்ரி, திமுக ஒன்றிய செயலாளர் அருளானந்தசாமி, திமுக நிர்வாகி தனிஸ்லால், ஐஜேகே கட்சி நிர்வாகி சிமியோன் சேவியர் ராஜ், பார்க்கவ குல முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் நாச்சியார்பட்டி பி.எஸ்.திருமாறன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்தன. பல காளைகளை வீரர்கள் அடக்க முடியாமல் திணறினர். சில காளைகள் சுற்றி சுற்றி வந்து மாடு பிடி வீர்ரகளை தூக்கி வீசின. மாடுகளை அடக்கிய வீரர்களுக்கு சைக்கிள், டைனிங் டேபிள், எவர்சில்வர் அண்டா, பித்தளை பானை, கட்டில், மிக்ஸி, பேன் என ஏராளமான பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
தஞ்சை மாவட்ட எஸ்.பி., ராஜாராம் உத்தரவின் பேரில், வல்லம் டிஎஸ்பி காயத்ரி தலைமையில், 400 போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர். இப்போட்டியில் காளைகள் முட்டியதில் மாடு பிடி வீரர்கள், வேடிக்கைப் பார்த்தவர்கள், மாட்டைப் பிடித்து சென்றவர்கள் என 50 பேர் காயமடைந்தனர். இவர்களில் பலத்தக் காயமடைந்த 27 பேர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் வாடிவாசலிலிருந்து திறந்து விடப்பட்ட காளைகளில் சில குறிப்பிட்ட தொலைவு வரை சென்றுவிட்டு மீண்டும் திரும்பி வந்தன. இதுபோல, வெவ்வேறு தருணங்களில் திரும்பி வந்த இரு காளைகள் வாடி வாசலிலிருந்து வந்த மற்ற இரண்டு காளைகளை முட்டின. இதனால், தலையில் பலத்த காயமடைந்த இரு காளைகள் உயிரிழந்தன. மேலும், ஒரு காளைக்கு முன்னங்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.























