சாலைதான் எங்களுக்கு களம்... சோதனைகள் மத்தியில் எள் அறுவடை செய்த விவசாயிகள்: நல்ல விலை கிடைப்பதால் மகிழ்ச்சி
களம் இல்லாததால் திருவையாறு பைபாஸில் தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை அலுவலகம் அருகில் சாலையில் இந்த எள் செடிகளை காயவைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

தஞ்சாவூர்: தஞ்சை அருகே திருவையாறு பைபாஸ் சாலை மாவட்ட காவல் துறை அலுவலகம் அருகில் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த எள் செடிகளை காய வைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். எள் செடிகளை காய வைக்க களம் இல்லாததால் சாலையில் காயவைப்பதாக வேதனையுடன் தெரிவித்தனர்.
தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். தற்போது சம்பா, தாளடி அறுவடைப்பணிகள் முடிந்து விட்டது. வண்ணாரப்பேட்டை, ஆலக்குடி உட்பட சுற்றுப்பகுதிகளில் விவசாயிகள் எள் சாகுபடியும் செய்திருந்தனர். தற்போது இந்த எள் செடிகள் அறுவடைப்பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
களம் இல்லாததால் திருவையாறு பைபாஸில் தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை அலுவலகம் அருகில் சாலையில் இந்த எள் செடிகளை காயவைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். கடந்த 2 நாட்களாக வெயில் அதிகம் இருப்பதால் எள் செடிகள் விரைவாக காய்ந்து வருகிறது. கடந்தாண்டை விட தற்போது எள் கூடுதல் விலைக்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், எள் சாகுபடியைப் பொறுத்தவரை 80 முதல் 85 நாட்கள் மட்டுமே கொண்ட மிகக் குறுகிய காலப் பயிராகும். தை மற்றும் மாசிப் பட்டங்களில் (ஜனவரி - பிப்ரவரி) நெல் அறுவடை முடிந்தவுடன், நிலத்தில் உள்ள ஈரப்பதத்தைப் பயன்படுத்தி எள் சாகுபடி செய்யப்படுகிறது. இதற்கு மிகக் குறைந்த அளவே தண்ணீர் தேவைப்படுவதால், கோடைக் காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை உள்ள நிலங்களுக்கும் இது மிகச் சிறந்த தேர்வாக அமைகிறது.
ஒரு ஏக்கருக்கு விதை, உழவு, களை எடுத்தல் மற்றும் அறுவடை என மொத்தம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை மட்டுமே செலவாகிறது. முறையான பராமரிப்பு மற்றும் தரமான விதைகள் மூலம் ஒரு ஏக்கருக்கு சராசரியாக 350 கிலோ முதல் 450 கிலோ வரை எள் மகசூல் கிடைக்கிறது. தற்போதைய சந்தை நிலவரப்படி, ஒரு கிலோ எள் தரத்தைப் பொறுத்து ரூ. 150 முதல் ₹160 வரை விற்பனையாகிறது. கடந்தாண்டு ரூ.110 முதல் ரூ.130 வரை மட்டுமே விற்பனையானது. இந்தாண்டு கூடுதல் விலைக்கு விற்பனையாகிறது.
தற்போதைய விலை நிலவரப்படி ஒரு ஏக்கருக்கு சுமார் ரூ.50,000 முதல் ரூ.60,000 வரை வருவாய் கிடைக்கிறது. அனைத்து செலவுகளும் போக, 85 நாட்களில் விவசாயிகளுக்கு நிகர லாபமாக ரூ.35,000 முதல் ரூ.45,000 வரை லாபம் கிடைக்கிறது. தற்போது நல்லெண்ணெய் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்துள்ளதால், சந்தையில் எள்ளுக்கான தேவை ஆண்டு முழுவதும் நிலையாக உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இடைத்தரகர்கள் இன்றி நேரடியாகவே நல்ல விலைக்கு எள் விற்பனையாவதாலும், பூச்சித் தாக்குதல் மற்றும் நோய் தாக்குதல்க்ள பெரிய அளவில் இல்லாததாலும் டெல்டா பகுதி விவசாயிகள் எள் சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். குறைந்த உழைப்பில், மிகக் குறுகிய காலத்தில் கைகொடுக்கும் எள் சாகுபடி, இந்த கோடைக் காலத்தில் விவசாயிகளுக்குப் பொருளாதார ரீதியாகப் பெரும் பக்கபலமாக மாறியுள்ளது என்பதில் ஐயமில்லை. காய வைக்கும் களம் இருந்தால் கூடுதல் செலவுகள் குறையும். அறுவடை முடிந்து உடனேயே களத்தில் காயவைத்து விடலாம். அரசு எங்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்குமா என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர் விவசாயிகள்.
Before You Go
Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
ட்ரெண்டிங் செய்திகள்






















