தஞ்சாவூர்: தாழ்வாக சுற்றிப்பறந்த சிறிய ரக விமானம் திருச்சி மக்களை பீதியில் ஆழ்த்தியது. விஷயம் தெரிஞ்ச பின்னாடி இதுக்குதான் இம்புட்டு பயந்தோமா என்று மக்கள் ஆசுவாசம் அடைந்தனர். விஷயத்தை பாருங்க. 

Continues below advertisement

திருச்சியில் நேற்று நகரின் பல பகுதிகளில் தாழ்வாகப் ஒரு விமானம் பறந்தது. இதனால் மக்கள் மத்தியில் சிறிது நேரம் பீதி ஏற்பட்டது. நேற்று வியாழக்கிழமை காலை, மக்கள் அதிகம் வசிக்கும் காந்தி மார்க்கெட் பகுதிக்கு மேலே முதலில் இந்த ஒற்றை எஞ்சின் விமானம் பறந்தது. பின்னர், பாலக்கரை, தென்னூர், கன்டோன்மென்ட், பீமா நகர் மற்றும் சத்திரம் பேருந்து நிலையம் போன்ற பகுதிகளிலும் இந்த சிறிய ரக விமானத்தை மக்கள் மிகவும் தாழ்வாக கண்டனர். அதன் சத்தமும் அதிகளவில் இருந்தது. 

விமானம் தரையிலிருந்து சுமார் 250 அடி உயரத்தில் மிகத் தாழ்வாகப் பறந்ததால், அதன் என்ஜின் சத்தம் அதிகமாக இருந்தது. இதனால் மக்களுக்கு அச்சத்தில் காய்ச்சலே வந்து இருக்கலாம். ஆனால் இந்த சிறிய ரக விமானம் எதற்காக பறந்தது என்ற விஷயம் தெரிந்த பின்னர் வடிவேலு காமெடிப் போல் சுனாபானா இதுக்காடா இம்புட்டு பயந்தோம் என்றுதான் மக்கள் மத்தியில் கமெண்ட் எழுந்து இருக்கும்.

Continues below advertisement

இந்த சிறிய விமானம், இந்திய புவியியல் ஆய்வுத் துறை (GSI) மூலம் மேற்கொள்ளப்படும் ஒரு பெரிய ஆய்வின் ஒரு பகுதியாகும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். இந்த ஆய்வு, ஜனவரி 1ம் தேதி வரை நடைபெறும். திருச்சி உட்பட 13 மாவட்டங்களில் நிலத்தடியில் உள்ள கனிம வளங்களைக் கண்டறிவதே இதன் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் இதை திருச்சி மாவட்ட நிர்வாகம் சொல்லலைங்க. ஆச்சரியமாக, அரியலூர் மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே இதுகுறித்து பொதுமக்களுக்கு ஒரு செய்தி வெளியீட்டை அனுப்பியிருந்தது. ஆனால், திருச்சி நிர்வாகத்திடம் இருந்து இதுபோன்ற எந்த அறிவிப்பும் வரவில்லை. இந்த விமானம் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகளிடம் இருந்து அனுமதி பெற்றுள்ளது. நாங்கள் அவர்களிடம் முன்கூட்டியே எங்களுக்குத் தெரிவிக்கச் சொல்லியிருக்கிறோம்," என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் வி. சரவணன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மாதம் புதுக்கோட்டையில் ஒரு நெடுஞ்சாலையில் இதுபோன்ற ஒரு விமானம் அவசரமாக தரையிறங்கிய சம்பவம் நடந்ததால், நாங்கள் கொஞ்சம் கவலைப்பட்டோம் என்று காந்தி மார்க்கெட் பகுதியை சேர்ந்த வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர். 

இந்த விமான ஆய்வுக்கு செஸ்னா கேரவன் 208B வகை விமானம் பயன்படுத்தப்படுகிறது. இது நிலத்தடியில் உள்ள கனிமப் படிவுகளைக் கண்டறிய சிறப்பு சென்சார்களைப் பயன்படுத்துகிறது. இந்த சென்சார்கள் பூமியின் அடியில் என்ன இருக்கிறது என்பதைப் படம் பிடித்து அனுப்பும். இது ஒருவகையில், பூமியின் உள்ளே மறைந்திருக்கும் புதையல்களைத் தேடுவது போன்றதுதான்.

இந்த ஆய்வு, எதிர்காலத்தில் நமக்குத் தேவையான கனிம வளங்களைக் கண்டறிய உதவும். இதனால், நமது நாட்டின் வளர்ச்சிக்கு இது மிகவும் முக்கியமானது. ஆனால், இதுபோன்ற ஆய்வுகள் நடக்கும்போது பொதுமக்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிப்பது அவசியம். அப்போதுதான் தேவையற்ற பீதி ஏற்படாது. மக்கள் தங்கள் அன்றாட வேலைகளை நிம்மதியாகச் செய்ய முடியும்.

இந்த விமானம் பற்றிய செய்தி பரவியதும், பலரும் என்ன நடக்கிறது என்று தெரியாமல் திகைத்தனர். இது நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் ஒரு அறிவியல் ஆய்வு என்பது பின்னர் தெரியவந்தது. இதுபோன்ற ஆய்வுகள் நடக்கும்போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களுக்குத் தெளிவான தகவல்களை அளிப்பது மிகவும் முக்கியம். அப்போதுதான் மக்கள் அச்சமின்றி இருப்பார்கள். இதை மாவட்ட நிர்வாகம் உணர வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பு.