தஞ்சாவூர்: எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த போது தான் டெங்குவால் 66 மற்றும் 65 என உயிரிழப்புகளை தமிழகம் சந்தித்து இருக்கிறது என்று சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம் சாட்டினார்.
தஞ்சாவூர் மாவட்டம், தென்னங்குடி கிராமத்தில், மக்களை தேடி மருத்துவ திட்டத்தின், 2.50 கோடி பயனாளி ஒருவருக்கு, சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மருந்து பெட்டகத்தை வழங்கினார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் கடைக்கோடியில் உள்ளவர்களுக்கும் மருத்துவ சேவையை முழுமையாக கொண்டு போய் சேர்க்கும் வகையில், மக்களை தேடி மருத்துவம் தொடங்கப்பட்டது. ஒரு திட்டம் துவங்கிய பிறகு, அது மக்களுக்கு தொடர்ச்சியாக செல்கிறதா என ஆய்வு செய்வதில், நமது முதல்வருக்கு நிகர் அவர்தான். இரண்டு கோடி பயனாளர்களை கடந்த நிலையில், கடந்த செப்.25ம் தேதி, அமெரிக்காவில் நடந்த ஐ.நா. சபை கூட்டத்தின் போது, உலகில் தொற்றா நோய்களுக்கான மருந்துகள் தருவதில், தொற்றா நோய்களை தடுப்பதில் எந்த நாடு சிறந்து விளங்குகிறது என்பதை அவர்கள் ஆய்வு செய்த போது, இந்தியாவில், தமிழகம் தான் என கண்டறியப்பட்டு, யுனைடெட் நேஷன்ஸ் இன்டர் ஏஜென்சி டாஸ்க் போஸ்ட் என்ற விருது கிடைத்தது.
இந்நிலையில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டம் தென்னங்குடியில் 2 கோடியே 50வது லட்சம் பயனாளிக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2012 மற்றும் 2017ம் ஆண்டில் தான் தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகம் ஏற்பட்டது. டெங்கு பாதிப்பினால், 2012ம் ஆண்டு 66 பேரும், 2017ம் ஆண்டில் 65 பேர் உயிரிழந்தார்கள். இது தான் இந்தியாவிலேயே டெங்கு பாதிப்பினால், உயிரிழப்புகள் ஏற்பட்ட ஆண்டு. இந்த இரண்டு ஆண்டுகளிலும் ஆட்சியில் இருந்தது அ.தி.மு.க., தான்.
கடந்த 11 மாதங்களில், வெறும் 9 பேர் மட்டுமே டெங்கு பாதிப்பால் இறந்துள்ளனர். இந்த ஒன்பது பேருக்கும் இணை நோய் பாதிப்பு இருந்து, சரியான நேரத்தில் மருத்துவம் பார்த்துக்கொள்ளாதவர்கள் என தெரியவந்தது. தி.மு.க., பொறுப்பேற்ற நான்கரை ஆண்டுகளில், ஒற்றை இலக்கு எண்ணிக்கையில் தான் டெங்கு பாதிப்பு உயிரிழப்புகள் உள்ளன.
ஆனால் சாட்சாத் பழனிசாமி முதல்வராக இருந்த போது தான் 66 மற்றும் 65 என உயிரிழப்புகளை தமிழகம் சந்தித்து இருக்கிறது. வடகிழக்கு பருவ மழையின் போது காய்ச்சல் வருவது இயல்பு. ஆனால், பெரியளவிலான பாதிப்பு இல்லை. யார் பதட்டம் அடைய வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.