வடிகட்டியதிலும் வடிகட்டிய பொய்... அமைச்சர் கோவி.செழியன் கூறியது எதற்காக?
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணியாற்றும் துாய்மை பணியாளர்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்ட காலை உணவு வழங்கும் திட்டம்

தஞ்சாவூா்: எடப்பாடி பழனிசாமி தஞ்சாவூரில் நெற்பயிர்கள் காய்கிறது என்று கூறியது வடிகட்டிய பொய். வடிகட்டிய பொய் என்று சொல்லுவதை விட வடிகட்டியதிலும் வடிகட்டிய பொய் என்று கூறினால் பொருத்தமாக இருக்கும் என்று அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார்.
தஞ்சை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார் தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணியாற்றும் துாய்மை பணியாளர்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்ட காலை உணவு வழங்கும் திட்டத்தினை திருவள்ளூர் மாவட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். தொடர்ந்து அவர் தமிழகம் முழுவதும் காணொலி காட்சி வழியாக தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து உயர் கல்வி துறை அமைச்சர் கோவி செழியன், கலெக்டர் பிரியங்காபங்கஜம், எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் கண்ணன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றினர். தொடர்ந்து தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள், ஓட்டுநர்கள் ஆகியோருக்கு காலை உணவு வழங்கப்பட்டது .
இந்தத் திட்ட மூலம் தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை மாநகராட்சியில் 757, கும்பகோணம் மாநகராட்சியில் 591, திருவையாறு நகராட்சியில் 96, பட்டுக்கோட்டை நகராட்சியில் 292, அதிராம்பட்டினம் நகராட்சியில் 108 மற்றும் 19 பேரூராட்சிகளில் 833 பேர் என மொத்தம் 2677 தூய்மை பணியாளர்கள் ,தூய்மை காவலர்கள், ஓட்டுநர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. நிகழ்ச்சியில் தஞ்சை மாநகர நல அலுவலர் நமச்சிவாயம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பின்னர் அமைச்சர் கோவி.செழியன் நிருபர்களிடம் கூறியதாவது: நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை உருவாக்கி, தமிழக அரசுக்கு பெருமை சேர்க்கிற பணிகளைச் செய்து கொண்டிருந்தாலும், இன்றைய தினம் முதலமைச்சருடைய கருணை உள்ள திட்டமாக தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவுத் திட்டத்தை திருவள்ளூர் மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி இருக்கிறார். தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நலத்திட்டம் மூலம் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள், தூய்மை காவலர்கள் ,டெங்கு நோய் பரவுவதைத் தடுப்பதற்குப் பணியாற்றுகிற உறுப்பினர்கள், ஓட்டுநர்கள் பயன் பெறுவர். இந்த மகிழ்வான திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி தூய்மை பணியாளர்கள், காவலர்களுக்கு 'வயிற்றில் பால் வார்த்ததை போல' என்று சொல்லுவார்கள். பால் வார்க்கவில்லை, உணவையும் வழங்கி அந்த மக்களுடைய உழைப்பின் திறனை ஊக்குவிக்கிற முயற்சி எடுத்திருக்கிற முதலமைச்சருக்கு அனைத்து தரப்பு மக்கள் சார்பாக என்னுடைய மனமார்ந்த நன்றியை, பாராட்டை, வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
எடப்பாடி பழனிசாமி தஞ்சாவூரில் நெற்பயிர்கள் காய்கிறது என்று கூறியது வடிகட்டிய பொய். வடிகட்டிய பொய் என்று சொல்லுவதை விட வடிகட்டியதிலும் வடிகட்டிய பொய் என்று கூறினால் பொருத்தமாக இருக்கும். நெல் உற்பத்தியில் இதுவரை செய்யாத சாதனையைச் செய்து காட்டியது தி.மு.க அரசு. வேண்டுமென்றால் அ.தி.மு.க ஆட்சியில் நெல் கொள்முதல் எவ்வளவு?
தி.மு.க அரசு அமைந்ததற்கு பிறகு நெல் கொள்முதல் எவ்வளவு? அ.தி.மு.க ஆட்சியில் விளைவிக்கப்பட்ட நெல் அளவு எவ்வளவு? தி.மு.க அரசு அமைந்த பிறகு நெல் பயிரிடப்பட்ட அளவு எவ்வளவு? என்பதையெல்லாம் கணக்கிட்டுப் பார்த்தால் அபரிமித வளர்ச்சி அடைந்து தஞ்சை மாவட்டம் நெல் உற்பத்தியில் சாதனை படைத்திருக்கிறது என்பது தெரியும். இந்தத் தருணத்தில் எடப்பாடி பழனிச்சாமி சொல்லியிருப்பது வடிகட்டிய பொய். இதனை விவசாயிகளும், பொதுமக்களும் நம்ப மாட்டார்கள். பொய்யையே சொல்லிப் பழக்கப்பட்ட பழனிசாமி வேறு விதத்தில் பொய் சொல்லலாம். ஆனால் விவசாயிகளை ஏமாற்ற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.























