தஞ்சாவூர்: கடந்த எட்டு ஆண்டுகளாக பல பிரச்சினைகளை தாண்டி, என்னுடன் பயணிக்கும், தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் வார்த்தைதான் எனக்கு முக்கியம். அவர்களின் முடிவுதான் என் முடிவு என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தெரிவித்தார். 

Continues below advertisement

தஞ்சாவூரில் நேற்று அ.ம.மு.க., பொதுச் செயலாளர் தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது: எனது தலைமையிலான, கூட்டணி தொடர்பாக பிற கட்சிகள் பேசி வருகின்றன. டிசம்பர் 31ம் தேதிக்குள்ளாக கூட்டணி பேச்சுவார்த்தைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து விடும் என நினைத்தேன். இருப்பினும், ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்கு முன்பாக, அ.ம.மு.க.,வின் முடிவு குறித்துத் தெரிய வரும். கடந்த எட்டு ஆண்டுகளாக பல பிரச்சினைகளைத் தாண்டி, என்னுடன் பயணிக்கும், தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் வார்த்தைதான் எனக்கு முக்கியம்.

அ.ம.மு.க.,வை தவிர்த்துவிட்டு, எந்தவொரு கூட்டணியும், ஆட்சி அமைக்க முடியாது என்கிற சூழ்நிலை தான் தமிழக அரசியலில் நிலவி வருகிறது. நான் இதை அதீத நம்பிக்கையில் சொல்லவில்லை. நான்கு முனைப்போட்டி வரும் பொழுது, அ.ம.மு.க., இடம் பெறும் கூட்டணி தான் உறுதியாக வெற்றியடையும். எதிரியை வீழ்த்துவதா, துரோகத்தை வீழ்த்துவதா என்பது முக்கியமல்ல.

Continues below advertisement

கேரளா உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கம்யூ., கட்சியை எதிர்த்து காங்கிரஸ் அதிக இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. திருவனந்தபுரத்தில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் என்பது வேறு. சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்கள் என்பது வேறு. அதனால் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் சட்டமன்றத் தேர்தலில் தேர்தலை பாதிக்காது என்றுதான் கூறுவார்கள்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதி அரசரை மாற்ற வேண்டும் என்று கூறுவது ஏற்புடையது அல்ல. கடவுள், சாதி, மதம் ஆகியவற்றின் பெயரால் மக்களைப் பிரிக்கின்ற செயலில், அரசியல் கட்சியோ அல்லது அமைப்போ ஈடுபடக்கூடாது. அமைதிப் பூங்காவாக, திகழும் தமிழகத்தில், பெரும்பான்மை, சிறுபான்மை என்று பார்த்து, சகோதர சகோதரிகளாக வாழும் மக்களிடையே யாரும் பிரிவினையை உருவாக்கிவிட,  கூடாது என்பதுதான் எனது வேண்டுகோள்.

எஸ் ஐ ஆர் தேவை இல்லை என்று கூறுவது தவறு. பீகாரில் நடந்தது குறித்து குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். இறந்தவர்கள் பெயர்கள் நீக்கம் விடுபட்டு உள்ளவர்கள் என சரியான முறையில் வாக்காளர் பட்டியல் தயார் செய்ய வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம். சட்டமன்றத் தேர்தலின் போது தேசிய தலைவர்கள் தமிழகத்திற்கு வருவது புதிது இல்லை. இது வழக்கமான ஒன்றுதான்.

ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒரு அணியில் இணைய வேண்டும் என்றுதான் சொல்கிறேன்; ஒரே கட்சியில் இணைய வேண்டும் என்று நான் சொல்லவில்லை. 2017ம் ஆண்டு, தீர்க்கமாக யோசித்துத்தான் அ.ம.மு.க., உருவாக்கப்பட்டது. இந்த இயக்கம், ஜெயலலிதாவின் கொள்கை மற்றும் லட்சியங்களை பல நுாற்றாண்டுகளுக்கு கொண்டு செல்லும் இயக்கமாக செயல்படும்.

தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி அமைய வேண்டுமென்றால், அவரது தொண்டர்கள் எங்கிருந்தாலும் ஒரு குடையின் கீழ், ஓர் அணியாகத் திரண்டால்தான் வெற்றிபெற முடியும் என்பதுதான் இன்றைய நிலைமை. இந்தத் தேர்தலில், அனைவருக்கும் தமிழக மக்கள் உரிய பதிலைத் தருவார்கள். நாங்கள் இடம்பெறும் கூட்டணியை தவிர்த்து வேறு எந்த கூட்டணியும் வெற்றி பெற முடியாது. அமமுக வெற்றிக் கூட்டணியில் இணையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.