உயரே இருந்து கழுகுப் பார்வை... கண்ணைக் கவர்ந்த பெரிய கோயில் சுவாமி வீதியுலா காட்சி
பெரிய கோயில் உலக நாட்டவர்களையும் கவர்ந்திழுக்க முக்கிய காரணம் கட்டுமானம்தான் என்றால் மிகையில்லை.

தஞ்சாவூர்: பெயர் சொன்னால் போதும் பெருமைகளை பட்டியலிடலாம். அந்தளவிற்கு தஞ்சையும், பெரிய கோயிலும் உலகளவில் மிகவும் பிரபலம். இத்தகைய பெருமை ஏற்படுத்திய மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழா 2 நாட்கள் மிகவும் பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது. இதில் சுவாமி வீதியுலாவின் போது நகர கூட இடமின்றி பக்தர்கள் நிரம்பி வழிந்த காட்சி உயரே பறக்கும் கழுகு பார்வையில் பார்த்தால் எப்படி இருக்கும்.
பெரிய கோவில்... இந்த வார்த்தை உலக மக்கள் மத்தியில் வெகு பிரசித்தம். தஞ்சை தரணி மக்களாலும் உலக தமிழர்களாலும் பெருமிதத்துடன் அழைக்கப்படும் பெரிய கோயில் என்கிற பிரகதீஸ்வரர் கோவில் கி.பி 1006ம் ஆண்டில் மாமன்னன் ராஜராஜசோழனின் ஆட்சியில் கட்டப்பட்டது. இன்றளவும் தமிழரின் கலை, அறிவியல் மற்றும் கட்டடக்கலைக்கு சான்றாக விண்ணுயர்ந்து யுனெஸ்கோவின் பாரம்பரிய கலை மற்றும் பண்பாட்டு சின்னமாகவும் அரிய பொக்கிஷமாகவும் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இக்கோயில் உலக நாட்டவர்களையும் கவர்ந்திழுக்க முக்கிய காரணம் கட்டுமானம்தான் என்றால் மிகையில்லை. பெரியகோவிலை ஆராய்ச்சி செய்யும் வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் துணையுடன் அக்குவேறு ஆணிவேராக ஆராய்ச்சி செய்தாலும் கட்டுமான ரகசியம் இன்னும் பிடிபடாமல்தான் உள்ளனர். கரிகால் சோழனால் கட்டப்பட்ட கல்லணையைப் பற்றிய முழுமையான ரகசியம் எப்படி பிடிபடவில்லையோ, அதே போல் தான் பெரிய கோவிலின் கட்டுமான ரகசியமும் இன்னமும் யாருக்கும் விளங்கவில்லை என்பது தான் உண்மை.
இக்கோவில் கட்டப்பட்ட விதமும், அதற்கு பயன்படுத்தப்பட்ட தூய்மையான கிரானைட் கற்களும் தான். கிரானைட் கற்கள் 20ம் நூற்றாண்டில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது என்ற நினைப்பை முறியடித்து சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பே கிரானைட் கற்கள் கொண்டு இக்கோவில் பயன்படுத்தப்பட்டுள்ளது ஆச்சரியம் தானே.
கருவறையின் மேலுள்ள விமானம், அதனைத் தாங்கும் சதுர வடிவிலான கற்கள், அதோடு சுற்றிலும் உள்ள 8 லிங்கங்கள் என இந்த மூன்றும் தான் ஒட்டு மொத்த கோவிலையும் தாங்கும் அஸ்திவாரமாக இருக்கின்றது என்பது தான் ஆச்சரியத்தின் உச்சமாகும். பொதுவாக அஸ்திவாரம் என்பது ஒரு கட்டிடத்தின் பாரத்தை தாங்கும் ஆதார சக்தியாகும். கட்டிடம் எந்த அளவுக்கு உயரமாக கட்டப்படுகிறதோ, அந்த அளவுக்கு அதன் அஸ்திவாரமும் வலுவாக, ஆழமாக இருக்கவேண்டும்.
216 அடி உயரத்துடனும், முழுக்க முழுக்க அதிக எடைகொண்ட கிரானைட் கற்களைக்கொண்டு கட்டப்பட்ட பெரிய கோவிலுக்கு எந்த அளவுக்கு அஸ்திவாரம் அமைத்திருக்க வேண்டும். இன்றைய கட்டுமான வல்லுநர்களை கேட்டால் 50 அடி ஆழத்திலும், 50 அடி அகலத்திலும் போட்டால் போதும் என்று சொல்வார்கள். ஆனால், இவ்வளவு பெரிய பிரமாண்டமான பெரிய கோவிலுக்கு தோண்டப்பட்ட அஸ்திவாரம் வெறும் 5 அடி ஆழம் தான் என்பதை நம்பித்தான் ஆக வேண்டும். அது தான் அறிவியல் உண்மையாகும். அங்கு தான் நம் தமிழனின் அறிவியல் திறமை வெளிப்பட்டிருக்கிறது.
கயிற்றுக் கட்டில் பார்த்து இருப்பீர்கள். அதில் பயன்படுத்தப்பட்ட கயிறானது பார்ப்பதற்கு இலகுவானதாக இருக்கும். ஆனால், அந்த கட்டிலில் ஆட்கள் உட்கார்ந்த உடனேயே பாரம் தாங்காமல் உள்வாங்கிக் கொண்டு, இறுக ஆரம்பிக்கும். கயிறுகளின் பிணைப்பானது வலுவாகிவிடும். இந்த சூட்சமத்தை தான் பெரிய கோவில் கட்டுமானத்திற்கும் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இப்படி கட்டிடக்கலையில் மிகவும் சிறப்பு பெற்ற பெரிய கோயிலை கட்டியவர் மாமன்னர் ராஜராஜ சோழன். இவரது சதய விழா ஆண்டுதோறும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040 சதய விழா தஞ்சை பெரிய கோயில் கடந்த 31ம் தேதி மற்றும் 1ம் தேதி என இரண்டு நாட்கள் வெகு சிறப்பாக நடைபெற்றது. இரண்டாம் நாள் நேற்று மாலை பெருவுடையார் பெரியநாயகி அம்மன் திருவள்ளுவர் சிறப்பு திருமேனி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளி ரிஷப வாகனத்தில் பெரிய கோயில் வளாகத்தில் இருந்து வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட திருமுறை கண்ட 5க்கும் மேற்பட்ட இசை கருவிகள் உடன் சிவகானங்கள் முழங்க வீதி உலா நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். மின்னொளியில் ஜொலித்த தஞ்சை பெரிய கோயில் மற்றும் சுவாமி வீதியுலா கழுகு பார்வையில் எடுக்கப்பட்ட காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.




















