தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில், வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இன்று இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது. இதனிடையே, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக மாணவர்கள் நலன் கருதி இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்துள்ளார்.





டெல்டா பகுதிகளில் அதிக கன மழை இன்னும் 24 மணி நேரத்திற்கு தொடர்ந்து நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், வடகிழக்கு பருவமழையின் போது ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பாக தஞ்சை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதி மக்கள் அனைவரும் இலவச கட்டணமில்லா தொலைபேசி எண்களை உடனடியாக தொடர்பு கொண்டு தங்கள் 51 வார்டுகளிலும் மழை  தொடர்பாக பாதிப்புகள் மற்றும் மின்சாரம் வேறு ஏதேனும் அவசர தொடர்புக்கு 24 மணி நேரமும் தஞ்சை மாநகராட்சி தஞ்சை பகுதி மக்களுக்காக சேவை செய்ய காத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

கோவில் குளம் நிரம்பியது

தஞ்சை மாவட்டத்தில் நேற்று முதல் விடாமல் தொடர்ந்து மிதமாகவும், கனமழையும் பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் மழை நீர் சாலைகளில் வெள்ளம் போல் ஓடியது. இந்நிலையில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே தேப்பெருமாநல்லூர் ஊராட்சிக்கு சொந்தமான மன்னார் சாமி கோவில் குளம் நேற்று பெய்த கன மழையில் நிரம்பியது.

இதனால் சாலையில் தண்ணீர் வெள்ளம் போல் ஓடியது. தற்போது தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் குளத்து நீர் நான்காக புறமும் வெளியேறியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து திருவிடைமருதூர் ஒன்றியக்குழு தலைவர் சுபாதிருநாவுக்கரசு, தேப்பெருமாநல்லூர் ஊராட்சி தலைவர் குமரவேல் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் குளத்தை பார்வையிட்டனர்.

அப்போது அவர்கள் இது குறித்து கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு சென்று மன்னார்சாமி கோவில் குளத்துக்கு உடனே வடிகால் வெட்ட ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.