தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே தான் வளர்த்த பசுமாடு இறந்த துக்கத்தில் இருந்த இளைஞர் மனஉளைச்சல் அதிகமாகி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கிராமத்து மக்கள் தங்கள் வீட்டில் வளர்க்கும் பசு, ஆடு ஆகியவற்றின் மீது அதீத பாசம் காட்டுவார்கள். தங்கள் குழந்தைகள் போல் அதை வளர்ப்பார்கள். பலர் அதற்கு பெயர் வைத்து கொஞ்சுவார்கள். அந்த அளவிற்கு கால்நடைகள் மீது உயிராக இருப்பார்கள். பலர் தாங்கள் வளர்க்கும் நாய்கள் மீது உயிராக இருப்பார்கள். அவற்றிற்கு ஏதாவது ஒன்று என்றால் மனம் தாங்காமல் துடித்து போய்விடுவார்கள். பசுவைத் தெய்வமாக விவசாயிகள் மதிக்கின்றனர். மற்ற மிருகங்களுக்கு இல்லாத மரியாதை பசுவுக்கு மட்டும் ஏன் என்ற கேள்வி எழும். பசு தன் கன்றுக்கு மட்டுமில்லாமல், அனைவருக்குமே தன் பாலைத் தருவதால் மட்டுமல்ல. பசு எதைச் சாப்பிடுகிறது. நெல்லிலிருந்து பெறும் அரிசியை நாம் சமைத்துச் சாப்பிடுகிறோம். நெல்லின் உமியைத் தவிடாகவும், நெற்கதிரின் வற்றிய நாற்றான வைக்கோலையும் பசு உணவாகக் கொள்கிறது.

எண்ணெய்யை நாம் உட்கொள்ள, மிச்சமிருக்கும் புண்ணாக்கை உட்கொள்கிறது பசு. ஆக, மனிதன் சாப்பிட்ட உணவின் இயற்கை மிச்சங்களைச் சாப்பிட்டு விட்டு, மனிதர்களைத் தன் குழந்தைகளாகவே கருதி பாலைக் கொடுக்கிறது. இப்படித் தன்னலம் கருதாமல் இருக்கும் பசுக்கள் விவசாயிகளின் அதீத அன்பு காட்டும் உயிராக உள்ளது.


 




 


அந்த வகையில் தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே தான் வளர்த்த பசு மாடு இறந்த துக்கத்தில் இருந்த இளைஞர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருவையாறு அடுத்த தில்லைஸ்தானம் குடிதாங்கி கிராமத்தை சேர்ந்தவர் ஏகாம்பரம். இவரது மகன் ரமேஷ் (36) இவருக்கு திருமணமாகி ரஞ்சிதா(30) என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். ரமேஷ் பசு மாடு ஒன்று வளர்த்து வந்தார். இதன் மீது அதிக பாசம் வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. அந்த பசுமாட்டிற்கு ஏதாவது ஒன்று என்றால் மிகுந்த வேதனை அடைந்து விடுவாராம். இந்நிலையில் அந்த பசுமாடு கடந்த 17-ம் தேதி மேய்ச்சலுக்கு சென்றபோது பள்ளத்தில் விழுந்து இறந்துவிட்டது.

இதன் நினைவாகவே ரமேஷ் இருந்து வந்துள்ளார். இதனால் கடந்த இரண்டு நாட்களாக மிக மன அழுத்தத்தில் இருந்து வந்தார். வீட்டிலும் யாரிடமும் சரியாக பேசவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ரஞ்சிதா தனது குழந்தைகளுடன் அம்மா வீடான அம்மன்பேட்டைக்கு சென்றிருந்தார். வீட்டில் யாரும் இல்லாதபோது ரமேஷ் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில், வீட்டுக்கு திரும்பி வந்த ரஞ்சிதா, ரமேஷ் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது அறிந்து அதிர்ச்சியடைந்தார்.  இதுகுறித்து ரஞ்சிதா மருவூர் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ் உடலை கைப்பற்றி திருவையாறு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தினர். இதில் பசுமாடு இறந்த துக்கத்தில் ரமேஷ் இந்த முடிவை எடுத்துள்ளார் என்று தெரிய வந்துள்ளது. 


எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.


மாநில உதவிமையம் : 104


சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண