தஞ்சை மக்களுக்கு மாலை நேரத்தில் ஆசுவாசப்படுத்திக் கொள்ள, மனதை இலேசாக்கிக் கொள்ள, விடுமுறை நாட்களில் குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசிக் கொள்ள தஞ்சையில் சிவகங்கை பூங்காவை தவிர வேறு பொழுது போக்கு பூங்கா எதுவும் கிடையாது.

அப்போதுதான் தஞ்சையில் 1995ம் ஆண்டு நடந்த உலக தமிழ் மாநாட்டின் போது பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டது. அதில் ஒரு திட்டம்தான் தஞ்சை ராமநாதன் ஆஸ்பத்திரி ரவுண்டானா பகுதியில் அமைக்கப்பட்ட கம்பீரமான மணிமண்டபம்.

தஞ்சையை ஆட்சி செய்த சோழ மன்னர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த மணிமண்டபம் கட்டப்பட்டது. 3.23 ஏக்கரில் ரூ.1.60 கோடி மதிப்பில் இந்த மணி மண்டபம் மிக கம்பீரமாக கட்டப்பட்டது. ஆஹா வந்திடுச்சி பொழுது போக்க அருமையான இடம் வந்திடுச்சு என்று தஞ்சை மக்கள் குதூகலம் அடையும் வகையில் இன்று இந்த ராஜராஜன் மணி மண்டபம் அமைந்துள்ளது என்றால் மிகையில்லை. நடுத்தர குடும்பங்களின் பொழுது போக்கு இடத்தில் முதன்மையாக இந்த மணிமண்டபம் இடம் பிடிக்கிறது.





இந்த மணிமண்டபத்தில் பூங்கா மற்றும் கோபுரம், ராஜராஜன் அகழ்வைப்பகம் என்று சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டது. தஞ்சை நகரில் பொழுது போக்குவதற்கு சிவகங்கை பூங்கா, மணிமண்டபம் இரண்டும்தான் மக்களின் மனம் கவர்ந்த இடமாக அமைந்தது. இதில் சிவகங்கை பூங்கா ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மேம்படுத்தப்படுகிறது. அதனால் தற்போது மணிமண்டபம் செம ஹார்ட் ஸ்பாட் ஆக மக்களுக்கு மாறி உள்ளது. நன்கு வளர்ந்த மரங்கள் மண்டபத்தை குளுமையாக்கி உள்ளது. சிலுசிலுவென்று மாலை நேரத்தில் மரங்களின் ஊடே புகுந்து வரும் காற்று மனதை தாலாட்டும்.

மணிமண்டபத்தில் புல்தரைகள், சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட இடமாக உள்ளது. ஊஞ்சல், குழந்தைகள் மகிழ்ச்சியுர விளையாட்டு தளங்கள் உள்ளன. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த தம்பதிகள் தங்களின் குழந்தைகளுடன் இங்கு வந்து ஆற அமர மனதை ரிலாக்ஸ் படுத்திக் கொள்கின்றனர். விடுமுறை நாட்கள் மற்றும் மாலை வேளைகளில் மணிமண்டபம் ஹவுஸ் புல் ஆகிவிடுகிறது. மணிமண்டபத்தில் நடுவில் உள்ள மண்டபத்தில் மாடித் தளங்களில் ஏறி பார்த்தால் தஞ்சையின் “வியூ” மனதை கொள்ளைக் கொள்ளும். மழை பெய்யும் நேரங்களில் ஆஹா என்ன அற்புதம் என்று குதூகலிக்கலாம்.

தஞ்சைக்கு சுற்றுலாவாக வரும் பயணிகள் இந்த மணிமண்டபத்திற்கு ஒரு விசிட் அடிக்கின்றனர். மாலை நேரத்தில் விளக்குகளின் மதிமயக்கும் அழகில் மணிமண்டபம் ஜொலிப்பதை கண்டு மகிழ்ச்சி அடைகின்றனர். தஞ்சை நகர மக்களுக்கு மட்டுமின்றி சுற்றுலாவாக வரும் பிற மாவட்ட, மாநில பயணிகளுக்கும் பிடித்தமான இடம்தான் இந்த தஞ்சை மணி மண்டபம் என்றால் மிகையில்லை.