தஞ்சை மாவட்டம், நீலகிரி ஊராட்சி, வள்ளலார் நகர் பகுதியில் சுமார் நுாற்றக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பெரும்பாலானோர் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், தினக்கூலியாக இருப்பதால், காலையில் நகரிலுள்ள குடிநீர் குழாயில் வரும் குடிநீர் பிடித்து வைத்து பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வள்ளலார் நகரில் உள்ள சாலைகளை அகலப்படுத்தும் பணி தொடங்கியது. அப்போது, சாலையின் கீழ் செல்லும் குடிநீர் குழாயினை, சாலை வேலை செய்பவர்கள் ராட்ஷத இயந்திரத்தை கொண்டு வேலை செய்யும் போது, உடைத்து விட்டனர். அப்போது, அங்குள்ள பொது மக்கள், இது குறித்து கேட்ட போது, சாலையை சீர் செய்தவுடன் குடிநீர் குழாயினை சீர் செய்து தருகின்றோம். அதுவரை குடிநீருக்கு மாற்று வழி செய்த தரப்படும் என்றனர். கடந்த ஒரு மாதமாகியும் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லாமல் இருந்து வந்தது.  ஆனாலும் அன்றாடம் தேவையான குடிநீரை பலகிலோ மீட்டர் துாரத்திற்கு சென்று பிடித்து வந்து வைத்து கொண்டும், வசதி படைத்தவர்கள் விலைக்கு தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வந்தனர்.




இது குறித்து, ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்த போது, எந்த விதமான நடவடிக்கையும் இல்லாமல் அலட்சியமாக இருந்து வந்தனர்.  இதனால் ஆத்திரமடைந்ததால், அப்பகுதியை சேர்ந்த சுமார் 50 க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள், குழந்தைகள் அனைவரும், அத்தியாவசிய தேவையான குடிநீர் வழங்க கோரி, காலி குடங்களுடன், அதே பகுதியில் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால், தகவலறிந்து அங்கு வந்த மருத்துவக்கல்லூரி போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து மறியல் விலக்கி கொள்ளப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.




 இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், சாலை விரிவாக்கம் என்ற பெயரில் குடிநீர் குழாயை, எந்த விதமான முன்னேற்பாடுகள் செய்யாமல் உடைத்துள்ளனர். இது குறித்து அவர்களிடம் கேட்டால், நிர்வாகத்திடம் கேட்க சொல்கிறார்கள்.  அதிகாரிகளின் அலட்சியத்தால், பல கிலோ மீட்டர் துாரம் சென்று, குடிநீருக்கும் மற்ற பயன்பாட்டிற்கும் தண்ணீர் எடுத்து வரவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் முதியவர்கள், கர்ப்பிணிதாய்மார்கள், குழந்தைகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளோம். பல முறை புகார் அளித்தும் எங்களுக்கு குடிநீர் வழங்காததை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம். மாவட்ட நிர்வாகம் உடனடியாக குடிநீர் வசதி செய்து தராவிட்டால், மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.