தஞ்சாவூர்: தஞ்சை ஆடக்காரத்தெரு சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் மழைக்காலங்களில் தண்ணீர குளம் போல் தேங்கி வாகனங்கள் செல்ல இடையூறாக உள்ளது.
தஞ்சை- நாகை சாலையில் மாரியம்மன் கோவில் செல்லும் வழியில் ஆடக்கார தெரு உள்ளது. இத் தெருவில் உள்ள தார் சாலை வழியாக புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் இருந்து வருபவர்கள் கீழவாசல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கும் செல்கின்றனர்.
தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகத் திகழ்ந்து வருகிறது. இந்தக் கோயிலுக்குத் தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக வந்து செல்கின்றனர்.
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த 88 கோயில்களில் ஒன்றான தஞ்சை அருகே உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் ஒன்றாகும். இந்த கோயிலின் கருவறையில் உள்ள மாரியம்மன் புற்று மண்ணால் ஆனது. இதனால் கருவறையில் உள்ள அம்பாளுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை. புற்று வடிவில் உள்ள அம்பாளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மண்டல தைலக்காப்பு அபிஷேகம் மட்டுமே நடைபெறும்.
மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்வார்கள். ஆவணி ஞாயிறுகிழமை அம்மனுக்கு உகந்த நாளாகும். இதனால் பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செல்வார்கள். மேலும் கோயிலில் ஆவணி பெருவிழா மிக சிறப்பாக நடைபெறும். இந்த நாட்களில் தேரோட்டம், தெப்ப உற்சவம் போன்றவை நடைபெறும். இதனால் இந்த கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர்.
இந்த சாலை வழியாக மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கும் தினமும் ஏராளமானோர் வாகனங்களில் சென்று வருகின்றனர். இது தவிர பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் அதிகமானோர் இந்த சாலை வழியாகத்தான் செல்கின்றனர். இதனால் தினமும் ஏராளமான வாகனங்கள் இப்பகுதியில் சென்று வருகிறது. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை தற்போது குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் உள்ளது.
தற்போது தஞ்சை மாவட்டம் முழுவதும் மழை விட்டு விட்டு பெய்கிறது. இப்படி மழை பெய்யும் போதெல்லாம் இந்த சாலையில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த சாலையை கடந்து செல்ல வாகன ஓட்டுனர்கள் கடும் சிரமப்படுகின்றனர். நேற்று முன்தினம் தஞ்சை நகரில் பெய்த கனமழையால் சாலையில் தண்ணீர் அதிக அளவில் தேங்கியது.
அப்போது பேரிகார்டு கொண்டு தடுப்பு அமைக்கப்பட்டு சாலை அடைக்கப்பட்டது. இதனால் அந்த வழியை பயன்படுத்துவர்கள் மாற்று வழியில் சுற்றிக் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது. மழை பெய்யும் நேரம் மட்டுமல்லாமல் மற்ற நேரங்களிலும் சாலையில் உள்ள பள்ளங்களை கடந்து செல்ல வாகன ஓட்டுனர்கள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலையை போர்க்கால அடிப்படையில் உடனடியாக சீரமைக்க வேண்டும். தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. அதில் இந்த சாலையையும் சீரமைத்து கொடுத்தால் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என்று அனைத்து தரப்பினரும் பயன் பெறுவார்கள். இந்த சாலை வழியாக மாரியம்மன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.