தஞ்சாவூர்: தஞ்சை பழைய பேருந்து நிலையம் முன்பு பூ மற்றும் வளையல், மணி வியாபாரம் செய்பவர்களை விரட்டக் கூடாது என்று வலியுறுத்தியும், மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் மாநகராட்சி அலுவலகம் முன்பு பூ விற்கும் போராட்டம் ஏஐடியூசி சார்பில் நடைபெற்றது.


தஞ்சை மாவட்ட ஏஐடியூசி தெரு வியாபார சங்க சார்பில் தஞ்சை பழைய பேருந்து நிலையம் முன்பும் எதிர்புறமும் கடந்த 30 ஆண்டுகளாக வியாபாரம் செய்து வந்த பூ மற்றும் வளையல் மணி நிற்பவர்களை மாநகராட்சி நிர்வாகம் அனுமதிக்க வேண்டும். அந்த இடத்தை விட்டு அவர்களை விரட்ட கூடாது என வலியுறுத்தி தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு பூ மற்றும் வளையல், மணி விற்கும் போராட்டம் சங்க மாவட்ட செயலாளர் முத்துக்குமரன் தலைமையில் நடைபெற்றது.  


ஆர்ப்பாட்டத்தை ஏஐடியூசி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சந்திரகுமார் துவக்கி வைத்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி, ஏஐடியூசி மாநில செயலாளர் தில்லைவனம், மாவட்ட தலைவர் சேவையா, மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன், உடல் உழைப்பு சங்க மாவட்ட பொதுச் செயலாளர் கோவிந்தராஜன் ஆகியோர் போராட்டத்தின் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.




ஆர்ப்பாட்டத்தில் தெரு வியாபார சங்க கிளை நிர்வாகிகள் கண்ணன், பிரகாஷ், சத்யா, மஞ்சுளா, வெண்ணிலா, உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் முன்பும், எதிர்புறமும் பூ மற்றும் வளையல், மணி உள்ளிட்ட சிறு,சிறு வியாபாரம் செய்யும் தொழிலாளர்கள் வியாபாரம் செய்து வந்தனர்.


தற்போது பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்ட பிறகு இவர்களை அங்கு வியாபாரம் செய்ய கூடாது என்று மாநகராட்சி நிர்வாகத்தால் விரட்டியடிக்கப்படுவதுடன் அவர்கள் விற்கும் பொருட்களை தரையில் வீசி எறிந்து, மாநகராட்சி வண்டிகளில் அள்ளிச் செல்வதுமான நடவடிக்கைகள் இருந்தன. இந்த நடவடிக்கைகளை கைவிட வலியுறுத்தி தஞ்சை மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தும் எவ்வித பாதுகாப்பும் இல்லாத நிலையில், தஞ்சை நகர காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் தொடர்ந்து வியாபாரம் செய்த இடத்தில் வியாபாரம் செய்ய அனுமதிக்கவும், வாழ்வாதாரம் பாதுகாக்கவும், தெரு வியாபார பாதுகாப்பு சட்டம் 2015,பிரிவு 3 ன்   படி  இவர்களுக்கு பாதுகாப்பு அளித்திட வேண்டி மனு அளிக்கப்பட்டது.        


இதன் பிறகும் மாநகராட்சி ஆணையர் மற்றும் ஊழியர்கள் இங்கு பூ விற்க கூடாது, கடை போடக்கூடாது என்று அவர்களை மிரட்டி விட்டு பூக்களை அள்ளிச் சென்றுள்ளனர். மேலும் தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் உள்ளே பூ விற்றவர்களையும் அனுமதிக்கவில்லை.  மாநகராட்சி நிர்வாகத்தின் இந்த அடாவடித்தன நடவடிக்கைகளை கண்டித்தும், தெருவியாபார   சட்டப்படி ஆணையர், அதிகாரிகள், ஊழியர்களுக்கு இது போன்ற அதிகாரம் இல்லாத நிலையில் தங்களது சட்டவிரோத மிரட்டல்களை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் பூ, வளையல் மணி  விற்கும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.