தஞ்சாவூர்: தஞ்சாவூரில் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி பங்குதாரர்களாக சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கில் மோசடி செய்தவரின் நண்பரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தஞ்சாவூர் அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கமாலுதீன். இவர் ராஹத் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்நிலையில் தனது நிறுவனத்தில் தொழிலில் முதலீடு செய்தால், அதிகளவில் லாபம் தருவதாக கூறி, மாநிலம் முழுவதும் ஏஜென்ட் மூலம் பலரிடம் சுமார் ஒரு லட்சம் முதல்10 லட்சம் வரை கமாலுதீன் வசூல் செய்துள்ளார். ஒரு பேருந்துக்கு 16 பேரை முதலீடு செய்ய வைத்துள்ளார்.
அதில் வரும் வருமானத்தை பேருந்து பராமரிப்பு, ஓட்டுநர் ஊதியம், உள்ளிட்ட செலவுகள் போக, மீதி வரும் லாபத் தொகையை சரிபங்காக, 16 பேருக்கு பிரித்துக் கொடுக்கப்படும் என ஒப்பந்தம் போட்டுள்ளார்.
இதனை அடுத்து தஞ்சாவூர் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்கள் கோடிக்கணக்கில் முதலீடு செய்தனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தாங்கள் சிறுக சிறுக சேர்த்த பணத்தை முதலீடு செய்துள்ளனர். மேலும் முதலீடு செய்தவர்களுக்கு மாதம் 2 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை லாப தொகையை வழங்கியுள்ளார். தொடக்கத்தில் லாப பணத்தை முறையாக வழங்கியதால், முதலீடு செய்தவர்கள் தங்கள் உறவினர்களையும் முதலீடு செய்ய வைத்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி இரண்டு ஆண்டாக முதலீடு செய்தவர்களுக்கு லாப தொகையை வழங்காமல் சமாளித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு ராஹத் தனியார் பஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கமாலுதீன் இறந்து விட்டார். தொடர்ந்து முதலீட்டாளர்களுக்கு லாபத்தில் பங்கு தொகை வழங்கப்படவில்லை. இதனை அடுத்து பாதிக்கப்பட்டவர்கள் உரிமையாளரின் மனைவி மற்றும் மகன்களிடம் சென்று தங்களின் முதலீட்டுத் தொகையை திரும்ப தருமாறு வலியுறுத்திய போது ராஹத் பஸ் கம்பெனிக்கும் எங்களுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துவிட்டனர்.
இதையடுத்து பங்குதாரர்கள், ராஹத் நிறுவனத்தின் சொத்து வாரிசுகளான கமாலுதீனின் மனைவி ரேஹானா பேகம், அவரது மகன்களான அப்சல் ரஹ்மான், ஹாரீஸ் ஆகியோரிடம், பணத்தை கேட்டனர். ஆனால், அவர்கள் தர மறுத்து விட்டனர். இது குறித்து பல்வேறு புகார்கள் போலீசாருக்கு வந்தன. வழக்கை திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவ்வழக்கை விசாரித்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், டிரான்ஸ்போர்ட் நிறுவன ஊழியர்கள், குடும்பத்தினர் என ஏற்கனவே 13 பேரை கைது செய்துள்ளனர். மேலும் ராஹத் நிறுவனத்திற்கு சொந்தமான 16 பஸ்கள், 8 மினி பஸ்கள், 6 இருசக்கர வாகனங்கள், 16 கார், ஒரு ஜே.சி.பி., 3 டிராக்டர் போன்ற வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், காமலுதீன் நண்பரும், தொழில் பங்குதாரருமான ஹாரீஸ் பிளக்ஸ் உரிமையாளரான, தஞ்சாவூரை சேர்ந்த அங்குராஜ்,41, என்பவர் ராஹத் நிறுவனத்தின் முதலீட்டில் இருந்து சொத்துக்களை வாங்கி குவித்ததும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக பொருாளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் ஹாரீஸ் பிளக்ஸ் உரிமையாளர் அங்குராஜை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர்.