தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ. 8 கோடியே 29 இலட்சம் மதிப்பீட்டில் புதிய பல்வேறு துறைச் சார்ந்த அரசு கட்டடங்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  திறந்து வைத்தார்.


நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார். தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி ஊராட்சியில் ரூ.28.56 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற கட்டடம், இனாத்துக்கான்பட்டி இராவுசாப்பட்டி ஊராட்சியில் ரூ.14.37 இலட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டடம், மருங்குளம் ஊராட்சி கோபாலநகரில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டடம், சூரக்கோட்டை கீழவஸ்தாசாவடியில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டடம். கூடலூர் ஊராட்சி ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.


இதேபோல் மணக்கரம்பை ஊராட்சியில் ரூ.13.97 இலட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டடமும், ரூ.12.30 இலட்சம் மதிப்பீட்டில் பொதுவிநியோக நியாயவிலை கட்டடமும், திருவையாறு வட்டம் மேலதிருப்பத்திருத்தி ஊராட்சியில் ரூ.34.50 இலட்சம் மதிப்பீட்டில் ஊரக கால்நடை மருந்தக கட்டடமும், வளப்பங்குடி ஊராட்சியில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடமும், திருச்சோற்றுத்துறை ஊராட்சியில் ரூ.13.50 இலட்சம் மதிப்பீட்டில் பொதுவிநியோக அங்காடி கட்டடம் உட்பட மொத்தம் ரூபாய் 8 கோடியே 29 இலட்சத்து 49 ஆயிரம் மதிப்பீட்டில் 24 புதிய பல்வேறு துறைச் சார்ந்த அரசு கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமை;சரச் திறந்து வைத்தார்.


பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வரின் உத்தரவுபடி தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள், சீருடைகள், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு கையடக்க கணினிகள் வழங்கப்பட்டன.


டிக்டோ ஜாக் அமைப்பினர் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தவுள்ள வரும் நிலையில், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். இதில் 5 அல்லது 6 கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான வழிவகைகளை மேற்கொண்டு வருகிறோம். மேலும் முதன்மைச் செயலரும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அப்போது நிதி சார்ந்த கோரிக்கைகள், நிதி சாராத கோரிக்கைகள் என்னென்ன இருக்கின்றன என்பதை அறிந்து, அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். 


மத்திய அரசு அதிகாரிகளுடன் தமிழக அரசு அதிகாரிகள் கலந்து பேசி சொல்லுமாறும், அதற்கான முயற்சி எடுப்பதாகவும் மத்திய அமைச்சர் கூறினாலும், முறைப்படி பதில் எதுவும் வரவில்லை. மத்திய அமைச்சரிடம் என்ன பதில் வருகிறது என்பதைப் பார்த்து, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பார். இவ்வாறு அவர் தெரிவித்தார். 


நிகழ்ச்சியில் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம் மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன் , உதவி ஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ் குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாலகணேஷ் அவர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி, ஒன்றியக் குழுத் தலைவர்கள் வைஜெயந்திமாலா கேசவன் (தஞ்சாவூர்), அரசாபகரன் (திருவையாறு), அரங்கநாதன் (எ) கல்லணை செல்லக்கண்ணு (பூதலூர்), மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் முத்துசெல்வம், செயற்பொறியாளர் ஊரக வளர்ச்சி முகமை செல்வராஜ், வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.