தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே வல்லத்தில் தஞ்சாவூர் வன கோட்டம் சார்பில் இ-சேவை வலைதளம் உருவாக்குதல் தலைப்பில் கருத்தரங்கு மற்றும் பயிற்சி பட்டறை நடந்தது.


தஞ்சாவூர் அருகே வல்லம் பெரியார் மணியம்மை கல்லூரியில் தஞ்சாவூர் வன கோட்டம், தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான பல்லுயிர் பரவல் பாதுகாப்பு பசுமையாக்கல் திட்டம் மற்றும் மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி ஆராய்ச்சி நிலையம் ஆகியவை இணைந்து தடி மரம் மற்றும் தடிமரம் அல்லா வனப்பொருட்களுக்கான இ-சேவை வலைதளம் உருவாக்குதல் என்ற தலைப்பில் கருத்தரங்கை நடத்தின.


தமிழகத்தின் வனப் பரப்புகளை மேம்படுத்துவதற்காக மரம் மற்றும் மரமல்லா வனப்பொருட்களுக்கான உற்பத்தியை அதிகரிக்கவும் அதனை விற்பனை செய்வதற்கான இணையதள இ-சேவை வலைதளம் உருவாக்குவதற்கான பங்குதாரர்களின் பயிற்சி பட்டறையாகவும் இது நடத்தப்பட்டது.


ஒரு நாட்டின் நிலப்பரப்பில் 35 சதவீதம் வனப் பகுதிகள் இருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் தற்பொழுது 23 சதவீதம் தான் வனப்பகுதிகள் இருப்பதாகவும், வனப்பகுதியில் நிலப்பரப்பை அதிகரிப்பதற்காக  தமிழக அரசு வனத்துறை  மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.


இதில் ஒரு கட்டமாக வனத்துறை அல்லாத இடங்களில் விவசாயிகள் தடிகளுக்கு பயன்படுத்தும் மரங்கள் , காகித கூழ், தீக்குச்சி உற்பத்தி செய்ய பயன்படுத்தும் மரங்கள்,  மூலிகை மரங்கள் வளர்ப்பது மற்றும் மூலிகை தாவரங்களை வளர்ப்பதை ஊக்குவித்து வருகிறது.


இதன் ஒரு கட்டமாக தமிழக அரசு  விவசாயிகள் உற்பத்தி செய்யப்படும் தடி மரம் மற்றும் தடி மரமல்லா வனப் பொருள்களுக்கான இணைய வழி இ சேவை வலைதளத்தை தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் முதல் கட்டமாக தொடங்க திட்டமிட்டு உள்ளது. இதில் விவசாயிகள் மூலிகை செடி உற்பத்தியாளர்கள் மற்றும் மரத்தடி வியாபாரிகள் சித்த மருத்துவர்கள் உள்ளிட்ட  உற்பத்தியாளர்களும் அதனை சந்தைப்படுத்தும் விற்பனையாளர்களும் இந்த இணையதளத்தில் பங்குதாரர்களாக இணைந்திருப்பார்


இதன் மூலம் விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் வளர்க்கும் மரம் மற்றும் மரமல்லா வனப் பொருட்களை விற்பனை செய்வதற்கான இணைய வழி விற்பனை தளத்தை வனத்துறை கண்காணிப்பில் செயல்படுத்த உள்ளது.  நிகழ்ச்சியில் தஞ்சாவூர் வன விரிவாக்க அலுவலர் வடிவேல் வரவேற்றார். திருநெல்வேலி மாவட்ட வன அலுவலர் அன்பு தலைமை வகித்து விளக்க உரையாற்றினார். மேட்டுப்பாளையம் வனவியல் கல்லூரி பேராசிரியர் வரதராஜ், ஓய்வு பெற்ற மாவட்ட வன அலுவலர் செல்வம், திருவண்ணாமலை வேளாண் கல்லூரி உதவி பேராசிரியர் வெண்ணிலா, தென்னை விஞ்ஞானி திருவையாறு வாசி செல்வம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.


இதில் விவசாயிகள், மரம் அறுவை ஆலை உரிமையாளர்கள், தடிமர வியாபாரிகள், மூலிகைச் செடி உற்பத்தியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். வன விரிவாக்க சரக அலுவலர் கிருஷ்ணசாமி நன்றி கூறினார்.