தஞ்சாவூர்: வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் தஞ்சாவூரில் நுங்குகள் விற்பனை அதிகரித்து வருகிறது. வெகு நேரம் காத்திருந்து பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுட்டெரிக்கும் வெயில்
தஞ்சையில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும் சாலைகளில் மக்கள் நடமாட்டமும் குறைந்தது. ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் தொடங்கி விட்டாலே, கோடையை சமாளிக்க பொதுமக்கள் படாத பாடுபடுவார்கள். இந்த ஆண்டும் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பு வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. தொடக்கத்திலேயே வெயில் சுட்டெரித்து வருவதால் அக்னி நட்சத்திரம் கால கட்டத்தில் வெயில் இன்னும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் நடமாட்டம் குறைந்தது
தமிழகத்தில் பல இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. தஞ்சை மாவட்டத்திலும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த வெயில் கொடுமையினால் பொது மக்கள் பகல் நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே வருவதற்கு தயங்குகின்றனர். வேறு வழியில்லாத நிலையில் குடை பிடித்துக் கொண்டும், வாகனங்களில் செல்பவர்கள் துணியால் தங்கள் தலையை மூடியபடியும் வெளியில் சென்று வருகின்றனர்.
வீடுகளிலேயே முடங்கும் மக்கள்
வெளியில் தான் இந்த நிலைமை என்றால் வீடுகளிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. பகல் நேரத்தில் வெயில் கொடுமை என்றால், இரவில் வெயிலின் தாக்கத்தினால் புழுக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்றும் வெயில் அதிகமாக காணப்பட்டது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது. வெயிலை சமாளிப்பதற்காக பெரும்பாலானோர் பகல் நேரங்களில் வீடுகளிலேயே முடங்கினர்.
நுங்கு விற்பனை கனஜோர்
வெயிலின் தாக்கத்தை சமாளிக்க இளநீர், தர்பூசணி, நுங்கு போன்றவற்றை மக்கள் அதிக அளவில் வாங்கி சாப்பிட்டனர். இதனால் தஞ்சை மாநகரில் பல்வேறு இடங்களில் சாலை ஓரங்களில் நுங்கு, இளநீர், பதநீர், தர்பூசணி விற்பனை அதிகளவில் நடைபெற்றது. முக்கியமாக இந்த வெயிலில் இருந்து உடலை பாதுகாத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் நுங்குகள் விற்பனை அதிகரித்து கொண்டே இருக்கிறது. மக்கள் காத்திருந்து நுங்குகளை வாங்கி செல்கின்றனர்.
உடல் உஷ்ணத்தை தணிக்கும் நுங்கு
நுங்குக்கு, கொழுப்பைக் கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்கும் தன்மை அதிகம். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் உணவுக் கட்டுப்பாட்டுடன், நுங்கை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். நுங்கில் உள்ள நீரானது வயிற்றை நிரப்பி, பசியையும் தூண்டும். மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு - இரண்டுக்குமே நுங்கு மருந்தாக இருப்பது அதிசயம். நுங்கைச் சாப்பிட்டால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும். சிலருக்கு உடல் உஷ்ணம் காரணமாக, எவ்வளவுதான் தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. அவர்கள் நுங்கை சாப்பிட்டால், தாகம் அடங்கிவிடும். ரத்தசோகை உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் விரைந்து குணமாகி உடல் சுறுசுறுப்பாகும்.
காத்திருந்து வாங்கும் பொதுமக்கள்
இத்தகைய சிறப்புகள் கொண்ட நுங்கு விற்பனை தஞ்சை மாநகரில் பல்வேறு இடங்களில் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. தஞ்சை சுற்றுலா மாளிகை, நாகை சாலை, மருத்துவக்கல்லூரி சாலை உள்ளிட்ட இடங்களில் நுங்கு விற்பனை அமோகமாக நடைபெற்றது. மூன்று நுங்கு சோலை ரூ. 10க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை பொதுமக்களும் காத்திருந்து வாங்கிச் சென்றனர். தஞ்சாவூர் மாவட்டம் திட்டை ராராமுத்திரைகோட்டை, வயலூர், சாலியமங்கலம், பூண்டி, மாரியம்மன் கோவில் போன்ற பல்வேறு பகுதியில் இருந்து நொங்கு வெட்டப்பட்டு விற்பனை கொண்டுவரப்படுகிறது. இதனை பொதுமக்கள் வரிசையில் நின்று வெகு நேரம் காத்திருந்து ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.