தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை அருகே நாகக்குடி நடுநிலைப்பள்ளி கம்ப்யூட்டர் லேப்பில் இருந்து லேப்டாப் , கம்ப்யூட்டர் சாதனங்கள் மற்றும் அருகில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலக கம்ப்யூட்டர் ஆகியவற்றை திருடிய மாணவரையும், இவற்றை வாங்கி மறைத்து வைத்த கூலித்தொழிலாளியையும் போலீசார் கைது செய்தனர்.

Continues below advertisement

தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை அருகே நாகக்குடியில் இயங்கி வருகிறது அரசு நடுநிலைப்பள்ளி. இங்கு மாணவர்கள் பயன்பெறும் வகையில் உயர்தரத்தில் கம்ப்யூட்டர் லேப் கட்டப்பட்டுள்ளது. இதில் மாணவர் கற்றுக் கொள்வதற்காக லேப்டாப், புரொஜெக்டர் மற்றும் கம்ப்யூட்டர் சாதனங்கள் பயன்பாட்டில் உள்ளன. இப்பள்ளிக்கு அருகில் ஊராட்சி மன்ற அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 17ம் தேதி முதல் தீபாவளியை ஒட்டி பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.

நேற்று முன்தினம் 22ம் தேதி கனமழை காரணமாக தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. தொடர் விடுமுறை காரணமாக நேற்று 23ம் தேதி காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியை ஸ்டெல்லா பள்ளியை திறந்துள்ளார். அப்போது கம்ப்யூட்டர் லேப் பகுதியில் உள்ள ஜன்னல் கம்பி உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே இருந்த ரூ.1.50 லட்சம் மதிப்பு லேப்டாப், கம்ப்யூட்டர் மானிட்டர், புரொஜெக்டர் உட்பட கம்ப்யூட்டர் சாதனங்கள் அனைத்தும் திருட்டு போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

Continues below advertisement

இதேபோல் நாககுடி ஊராட்சி அலுவலகத்தின் ஜன்னல் கம்பிகளும் உடைக்கப்பட்டு அங்கிருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள கம்ப்யூட்டர் உட்பட சாதனங்கள் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியை ஸ்டெல்லா மற்றும் ஊராட்சி மன்ற எழுத்தர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சுவாமிமலை போலீசில் புகார் செய்தனர். இதன்பேரில் சுவாமிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். 

இதில் 16 வயது சிறுவன் ஒருவன் கடந்த 22ம் தேதி இரவு நேரத்தில் பள்ளி உள்ள பகுதிக்கு அடிக்கடி சென்று வந்தது தெரிய வந்தது. தொடர் விசாரணையில் அதேபகுதியை சேர்ந்த சுவாமிமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து அந்த மாணவரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் பள்ளி மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் ஜன்னல் கம்பியை உடைத்து கம்ப்யூட்டர்களை திருடி சென்றதை ஒப்புக்கொண்டார். மேலும் அவற்றை தன் வீட்டிற்கு அருகில் உள்ள கூலித் தொழிலாளியான ரமேஷ் (32) என்பவரிடம் கொடுத்து வைத்திருப்பதையும் அந்த மாணவர் தெரிவித்தார். தொடர்ந்து சுவாமிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர் மற்றும் ரமேஷை கைது செய்தனர். 

அந்த மாணவருக்கு 16 வயதே ஆவதால் ஜுனைல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தஞ்சாவூர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். ரமேஷை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் சுவாமிமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.