(Source: Poll of Polls)
பயிர் கடனுக்காக அலைக்கழிக்கின்றனர்... குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வேதனை
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் வாழ்ந்த கல்லணை கரையில் அவருக்கு உருவ சிலையும், மணிமண்டபமும் அமைக்க வேண்டும்.

தஞ்சாவூர்: மேட்டூர் அணை மிகை நீர்மட்டத்தை 130 அடியாக உயர்த்த வேண்டும். பயிர் காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கோட்டாட்சியர் இலக்கியா தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் சம்பந்தமாக பேசினர்.
ஜீவக்குமார்: உய்யக்கொண்டான் கால்வாயில் தண்ணீர் திறக்கும் தேதியை உடனே அறிவிக்க வேண்டும். பயிர் காப்பீடு குத்தகை விவசாயிகளுக்கு கிடையாது என்ற நடைமுறையை கைவிட வேண்டும். பயிர் காப்பீடு திட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். ஒரு காலத்தில் கங்கைகொண்ட சோழபுரத்திற்கே கல்லணை அருகே உள்ள கடையக்குடி பகுதியில் இருந்து தண்ணீர் சென்றது. ஆனால் தற்போது கல்லணைக்கு அருகில் இருந்தும் கடையக்குடி நீர்நிலை தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது . உடனே அங்கு தண்ணீர் நிரப்ப வேண்டும். தஞ்சை அருகே பாளையப்பட்டியில் சங்ககால ஈம தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. கீழடிக்கு இணையாக கருதப்படும் பாளையப்பட்டியில் சங்க கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்தை அரசு கையகப்படுத்தி அங்கு அகழ்வாராய்ச்சி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ்: தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடன் பெற செல்கின்ற விவசாயிகளை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து கடன் இல்லை என்று சான்று வாங்கி வர வேண்டும் எனக் கூறி அலைக்கழிப்பது ஏற்புடையது அல்ல . எனவே இந்த நடைமுறையை உடனே கைவிட்டு பழைய நடைமுறையை தொடர வேண்டும். குறுவைக்கு பயிர் காப்பீடு செய்யவுள்ள விவசாயிகளுக்கு சொந்த நிலமாக இருந்தால் தான் காப்பீடு செய்ய முடியும். குத்தகையாக இருந்தால் காப்பீடு செய்ய முடியாது என்பதை ஏற்க முடியாது. எனவே இந்த நடைமுறையை கைவிடாவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்.
ஏகேஆர்.ரவிசந்தர்: கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தேவையான இடங்களில் கதவணைகளைக் கட்டி கடலுக்கு செல்லும் தண்ணீரை சேமிக்க வேண்டும். மேட்டூர் அணையின் கீழ் காவேரி ஆற்றில் பெரிய நீர்த்தேக்கம் ஏதும் அமைக்க வாய்ப்பு இல்லை என்பதால் மேட்டூர் அணையை மிகை நீர்மட்டத்தை 120 அடியில் இருந்து மேலும் 10 அடி உயரத்திலும் என வடிவமைப்பின் போதே பொறியாளர் கர்ணன் எல்லீஸ் கூறியுள்ளார். எனவே அதன் அடிப்படையில் மேட்டூர் அணை நீர்மட்டத்தை 130 அடியாக உயர்த்த வேண்டும். மேலும் நமது உரிமை நீர் 177.25 டி.எம்.சி ஆண்டுதோறும் கர்நாடகத்தில் இருந்து பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் வாழ்ந்த கல்லணை கரையில் அவருக்கு உருவ சிலையும், மணிமண்டபமும் அமைக்க வேண்டும். குறுவை தொகுப்பு திட்டத்தில் பயனாளிகளை கூடுதலாக்கி விண்ணப்பிக்க கால அவகாசத்தை ஆகஸ்ட் 16 வரை நீட்டிக்க வேண்டும் .
பெரமூர் அறிவழகன்: தமிழ்நாடு வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு கடன் வழங்க, புதுப்பிக்க சிபில் ஸ்கோர், என்.ஓ.சி போன்ற ஆவணங்கள் கேட்பதை தவிர்த்து பழைய நடைமுறையை கடைபிடிக்க வேண்டும். திருவையாறு பகுதியில் துணை வேளாண் விற்பனை கூடம், உழவர் சந்தை அமைக்க வேண்டும். ஓலத்தேவராயன்பேட்டை குடிநீர் குழாய்களில் அசுத்தமான நீரும், அடைப்பு உள்ளதை போக்க வேண்டும் .
தங்கவேல் : நடப்பு சம்பா பருவத்திற்கான விதைகளை விவசாயிகளின் நலன் கருதி வேளாண்மை விரிவாக்க மையத்தின் மூலம் வழங்க வேண்டும் .
வெள்ளாம்பெரம்பூர் ரமேஷ்: திருவையாறு ஊரக வட்டார வளர்ச்சி துறை சார்பாக 2012-2013 ஆண்டில் வெள்ளாம் பெரம்பூர் எல்லைக்கு உட்பட்ட நம்பர்3 பிள்ளை வாய்க்கால் வலது கரையில் 10 கிராமங்களின் விவசாய பயன்பாட்டுக்கான தார்சாலை அமைக்கப்பட்டது. தற்போது அந்த சாலை மிகவும் மோசமாக உள்ளது. புதிய தார்சாலை சாலை அமைத்துதர வேண்டும். அம்மன் பேட்டை முதல் விண்ணமங்கலம் சாலையில் வெள்ளாம் பெரம்பூர் எல்லைக்கு உட்பட்ட எண் 8/4,9/6 எண் கொண்ட பாலங்கள் மிக மோசமான நிலையில் உள்ளது பள்ளி வாகனங்கள்,பேருந்து சிற்றுந்து மற்றும் கனரக வாகனங்கள் பொதுமக்கள் போக்குவரத்து சாலையில் உள்ள இந்த பாலங்களை உடன் சரி செய்ய வேண்டும், குறுவை தொகுப்பு திட்ட தேதியை நீடிக்க வேண்டும். 40 கிலோ சிப்பமாக கொள்முதல் செய்யப்படும் நெல்லின் எடையை 50 கிலோ சிப்பமாக கொள்முதல் செய்ய வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினர்.





















