வடிய வழியில்லாமல் தேங்கி நிற்கும் மழைநீர்... தொற்று நோய் பரவும் அபாயம்
கனமழையின் போது இந்த பகுதியில் இரண்டு அடி அளவிற்கு சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும் சாலையும் பழுதடைந்து ஆங்காங்கே பள்ளமாக மாறி உள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் ஆலக்குடி அருகே சிவகாமிபுரம் மெயின் ரோட்டில் மழை நீர் ஓட வழியின்றி சாலையிலேயே தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. மேலும் சாலையும் ஆங்காங்கே பள்ளமாகி உள்ளதால் வாகனங்கள் சென்று வர மிகுந்த சிரமமான நிலை ஏற்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் சிவகாமிபுரம் வழியாக ஆலக்குடி, வண்ணாரப்பேட்டை, புதுகல்விராயன்பேட்டை, சித்திரக்குடி, பூதலூர், திருக்காட்டுப்பள்ளி பகுதிகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் பால் வேன், கேஸ் சிலிண்டர் வேன், லாரி உட்பட சரக்கு ஏற்றிச் செல்லும் வாகனங்களும் தினமும் நூற்றுக்கணக்கில் சென்று வருகின்றன.
இந்நிலையில் சிவகாமிபுரம் மெயின் ரோட்டில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த பகுதியில் மழைநீர் வடிந்து செல்ல வடிகால் உள்ளது. ஆனால் பள்ளிக்கூட தெரு பகுதியில் புதிதாக சாலை அமைக்கப்பட்டபோது இதன் வழியாக சென்ற வடிகால் குழாய்யை மூடி சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மழைநீர் வடிந்து வடிகாலுக்கு செல்ல முடியாததால் சாலையிலேயே தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. இங்கு தொடக்கப்பள்ளியும் செயல்பட்டு வருகிறது. தேங்கி நிற்கும் தண்ணீரால் கொசு உற்பத்தியாகி பள்ளி குழந்தைகள் பாதிக்கப்படும் நிலையும் உள்ளது.
கனமழையின் போது இந்த பகுதியில் இரண்டு அடி அளவிற்கு சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும் சாலையும் பழுதடைந்து ஆங்காங்கே பள்ளமாக மாறி உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இந்த பகுதி வழியாக செல்லும் வாகனங்கள் தடுமாறியபடியே செல்கின்றன. மேலும் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்பது தெரியாமல் விபத்துக்குள்ளாகும் நிலையும் உள்ளது.
சிறிய அளவில் இருந்த பள்ளங்கள் தற்போது பெரிய அளவில் மாறி வருகிறது. எதிரில் வாகனங்கள் வரும்போது பள்ளம் இருப்பது தெரியாமல் தடுமாறி விழுகின்றனர். எனவே இந்த சாலையை புதிதாக அமைத்து தர வேண்டும். மேலும் மழைநீர் வடிந்து செல்லும் வகையில் வடிகால் குழாயையும் சீரமைத்து தரவேண்டும். பள்ளி மாணவ, மாணவிகள் வெளியில் வந்து செல்லும் போது தேங்கி நிற்கும் தண்ணீரில் இருந்து அவர்களுக்கு தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. எனவே உடன் இந்த சாலையை புதிதாக அமைத்து முன்பு இருந்தது போல் மழைநீர் வடிந்து செல்லும் குழாயையும் சீரமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




















