தஞ்சாவூர்: தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் புனரமைக்கப்பட்ட பயணிகள் ஓய்வறைகளை ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் திறந்து வைத்தார்


தமிழகத்தின் நெற்களஞ்சியம்


தஞ்சாவூர் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது. சோழர்களின் தலைநகரமாய் விளங்கியது. மேலும் உலகப் புகழ் வாய்ந்த பெரிய கோவில் என அழைக்கப்படும் பெருவுடையார் கோயில் அமைந்த மாநகரம்தான் தஞ்சை.  உலகப் புகழ் பெற்ற சரசுவதி மகால் நூலகத்தைத் தன்னகத்தே கொண்டது. இந்நூலகத்தில் காணக்கிடைக்காத மிக அரிய ஓலைச் சுவடிகள் நூற்றுக் கணக்கில் திரட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. உலகில் தமிழுக்கென்று அமைக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம் தஞ்சாவூரில் உள்ளது. தஞ்சாவூர் ஓவியங்களும், கலைத்தட்டுக்களும் உலகப் புகழ் பெற்றவை. மேலும், தஞ்சாவூர்த் தலையாட்டிப் பொம்மையும் மிகவும் புகழ் பெற்றது.




தென்னகப்பண்பாட்டு மையம்


கலை மற்றும் பண்பாட்டினை வளர்ப்பதற்காகவும் பாதுகாப்பதற்காகவும் மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள தென்னகப் பண்பாட்டு மையம் தஞ்சாவூரில் தான் அமைந்துள்ளது. இத்தகைய பெருமை வாய்ந்த தஞ்சாவூருக்கு பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து அதிகளவில் சுற்றுலாப்பயணிகள் ரயிலில் வருகின்றனர். இதனால் தஞ்சாவூர் ரயில் நிலையம் எப்போதும் பயணிகளால் நிறைந்து காணப்படும். 


தஞ்சை பெரிய கோயில்


தஞ்சை பெரிய கோயில், தஞ்சை பெருவுடையார் கோயில் என பலவாறாக அழைக்கப்படும் இந்தக் கோயில் உலகமே வியக்கும் அளவுக்கு கம்பீரமாய் நிற்கிறது. சோழ நாட்டில் பரந்து விரிந்தோடும் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. தமிழர்களின் கட்டடக் கலைக்கு எடுத்துக் காட்டாக விளங்கும் இது, 10ஆம் நூற்றாண்டில் சோழ பேரரசர் முதலாம் இராசராச சோழன் கட்டிய இதை பல்லாயிரக்கணக்கானோர் வந்து, ஆண்டுதோறும் பார்த்து பிரமித்து போகும் அளவுக்கு இதன் சிறப்புகளும் உயர்ந்து நிற்கிறது. இது நாட்டில் உள்ள மிகப் பெரிய கோயில்களில் ஒன்று.




ரயில் நிலையத்தில் ஓய்வறைகள் புனரமைப்பு


நகரின் மையப் பகுதியில் உள்ளதால் ஆண்டுதோறும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். பிற மாநிலங்களில் இருந்து ரயிலில் வரும் பயணிகள் தங்குவதற்கு ரயில் நிலையத்தில் ஓய்வறைகள் உள்ளன. பழுதடைந்த நிலையில் இருந்த இவற்றை சீரமைக்கும் பணிகள் நடந்து வந்தது. இந்நிலையில் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் புரனமைக்கப்பட்ட பயணிகள் ஓய்வறைகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது. தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் பயணிகள் தங்கும் வகையில் ஓய்வறைகள் ஏற்கெனவே தெற்கு ரயில்வே நிர்வாகத்தால் நிர்வகிக்கப்பட்டு வந்தது.


இந்த ஓய்வறைகள் மழைகாலங்களில் ஆங்காங்கே மழைநீர் கசிந்து பழுதானதையடுத்து, அதை புனரமைக்கும் பணிகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடந்து வந்தது. புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, இதன் பராமரிப்பு ஐஆர்சிடிசி நிர்வாகத்திடம் தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒப்படைத்தது.


10 குளிரூட்டப்பட்ட அறைகள் திறப்பு


அதன்படி 10 குளிரூட்டப்பட்ட அறைகள் புனரமைக்கப்பட்டு, அதனை பயன்பாட்டுக்கு திருச்சி ரயில்வே கோட்ட மேலாளார் அன்பழகன் திறந்து வைத்தார். அதேபோல் தஞ்சாவூர் ரயில்வே ஊழியர்கள் குடியிருப்பில் புதிதாக சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டு அதனையும் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகள் செந்தில்குமார், ரவிக்குமார், வினோத்குமார், பிரசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.