தஞ்சாவூர்: தஞ்சாவூர் பர்மா பஜாரில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 10- க்கும் அதிகமான கடைகளை மாநகராட்சி நிர்வாகத்தினர் பொக்லைன் இயந்திரத்தை வைத்து அகற்றினர்.


தஞ்சையில் வ.உ.சி.நகர், ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழைநீர் ராணி வாய்க்கால் மூலம் வடிந்து அழகி குளத்துக்கும், கோட்டை அகழிக்கும் செல்லும் வகையில் நீர்வழிப்பாதை இருந்தது. இந்த நீர்வழிப்பாதை கல்லணைக்கால்வாய் அமைக்கப்பட்ட போது அதன் கீழே ராணி வாய்க்கால் தண்ணீர் செல்வதற்கு இடையூறு இல்லாத வகையில் குழாய் பதிக்கப்பட்டது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்காத நிலையை உருவாக்க இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் இந்த வாய்க்காலில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டதால் நீரோட்டம் தடைபட்டது.


இதனால் குளம் மற்றும் அகழிக்கு தண்ணீர் செல்லவில்லை. இதையடுத்து இந்த வாய்க்கால் மீட்கும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் இறங்கியது. அதன்படி இர்வீன்பாலத்தில் இருந்து ஆபிரகாம் பண்டிதர் சாலை வரையில் ராணிவாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் அகற்றும் பணி நடந்தது.




இதற்கு ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதும் நீதிமன்ற உத்தரவு என்பதால் ஆக்கிரமிப்புகள் கிடுகிடுவென்று அகற்றப்பட்டது. தொடர்ந்து  பர்மாபஜார் பகுதியில் உள்ள வாய்க்கால் மீட்கும் பணியை மேற்கொள்வதற்கு முன்பாக ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். இந்நிலையில் தற்போது 2-வது கட்டமாக ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்பட்டு இருந்த கடைகள் அகற்றும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் தொடங்கினர்.


இந்த பர்மாபஜார் பகுதியில் மட்டும் 89 கடைகள் உள்ளன. இந்த கடைகளை அகற்றுமாறு மாநகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடைக்காரர்களிடம் அறிவுறுத்தினர். அதன்படி கடைக்காரர்கள் கடைகளை தாங்களாகவே அகற்றி வருகின்றனர். அதன்படி அகற்றப்பட்ட 10-க்கும் மேற்பட்ட கடைகள் இருந்த இடத்தில் உள்ள ராணி வாய்க்கால் மீட்கும் பணி மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் உத்தரவின் பேரில் நகரமைப்பு அலுவலர்கள் மேற்கொண்டனர்.


அதன்படி பொக்லைன் எந்திரம் உதவியுடன் வாய்க்கால் மீது போடப்பட்டு இருந்த கான்கிரீட் தளத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த கடைகள் அகற்றப்பட்ட பின்னர் அந்த கான்கிரீட்டை உடைத்து அதன் உள்ளே இருந்த மண்ணை அகற்றி வாய்க்காலை மீட்கும் பணிகள் வெகு மும்முரமாக நடந்தது. பர்மாபஜார் பகுதியில் மட்டும் 12 அடி அகலம் உடையதாக இந்த வாய்க்கால் இருந்தது.


வாய்க்காலில் இருந்து அகற்றப்பட்ட மண்ணையும், அப்புறப்படுத்தும் பணிகளையும் மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணிகள் முடிவடைந்த பின்னர் ராணி வாய்க்கால் மூலம் அழகி குளத்துக்கும், அகழிக்கும் தண்ணீர் கொண்டுவரப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். 


தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல பணிகள் நடந்து வருகிறது. இதில் இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நீர்வழிபாதைகள் சீரமைக்கப்பட்டு வருவது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பணிகளை இத்துடன் நிறுத்தி விடாமல் அரசர்கள் காலத்தில் இருந்த நீர் வழிபாதைகளை முழுமையாக ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.