தஞ்சாவூர்: தஞ்சாவூர் கல்லணைக்கால்வாய் 20 கண் பாலம் அருகில் குழந்தைகளுடன் தண்ணீரில் குதித்து இறந்தவர்கள் அக்கா, தங்கை என்று அடையாளம் தெரிய வந்துள்ளது. தங்களின் வாழ்க்கை சரியானபடி அமையவில்லையே என்ற வருத்தத்தில் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
தஞ்சாவூர் பூச்சந்தை அருகே கல்லணைக்கால்வாயில் 20 கண் பாலம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் நேற்று முன்தினம் மதியம் கைக்குழந்தை, 5 வயது சிறுவனுடன் 2 பெண்கள் நடந்து வந்துள்ளனர். அப்போது குழந்தைகளுடன் அந்த பெண்கள் இருவரும் சட்டென்று கல்லணை கால்வாயில் குதித்து விட்டனர். ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகம் இருந்ததால் 4 பேரும் நீரில் மூழ்கினர்.
இதனை அங்கு குளித்துக் கொண்டிருந்த பொதுமக்கள் பார்த்து உடனடியாக ஆற்றில் குதித்து அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் சிறுவன் மற்றும் 2 பெண்கள் ஆகியோரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இருப்பினும் நீரில் மூழ்கியதால் அந்த 3 பேரும் இறந்த நிலையில்தான் மீட்கப்பட்டனர். கைக்குழந்தை மட்டும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு விட்டது.
தொடர்ந்து பொதுமக்கள் தஞ்சாவூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ஆற்றில் சிறுமி, சிறுவன், கைக்குழந்தையுடன் குதித்து தற்கொலை செய்து கொண்ட அந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள். குடும்பத்தகராறில் தற்கொலை செய்து கொண்டனரா? அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களா? அல்லது கடன் பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டனரா என்பது குறித்து தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மேலும், ஆற்றில் அடித்து செல்லப்பட்ட கைக் குழந்தையின் உடலை தஞ்சாவூர் தீயணைப்பு படை வீரர்கள் 5 பேர் மாலை வரை சூரக்கோட்டை வரை சென்று தேடிப்பார்த்தனர். இருப்பினும் குழந்தையின் உடல் கிடைக்கவில்லை.
இந்நிலையில் கல்லணை கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டவர்கள் தனது மகள்கள் மற்றும் பேரக்குழந்தைகள் என தஞ்சாவூர் பொட்டுவாச்சாவடி ரோடு, யாகப்பா நகர் பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவர் தாலுகா போலீசில் தகவல் தெரிவித்தார். இதையடுத்து தங்கவேல் மற்றும் அவரது மூத்த மகன் கார்த்திக் ஆகியோர் தஞ்சாவூர் மாவட்ட கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அந்தப் பெண்களின் உடலை அடையாளம் காட்டினர்.
இதன்படி தற்கொலை செய்து கொண்டவர்கள் ராஜேஸ்வரி (30), அவரது மகன் ஹரிஷ் (6), ராஜேஸ்வரியின் தங்கை துர்கா தேவி (28), துர்கா தேவியின் 10 நாள் குழந்தை என தெரியவந்தது. ராஜேஸ்வரியின் கணவர் விஜயராகவன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். இதனால் தனது தந்தையுடன் ராஜேஸ்வரி வசித்து வந்துள்ளார். இவரது தங்கை துர்கா தேவி, கார்த்திக் என்பவரை காதல் திருமணம் செய்துள்ளார். இருப்பினும் துர்கா தேவிக்கும் அவரது கணவருக்கும் இடையில் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்பட்டு வந்ததால் கர்ப்பிணியான நிலையில் துர்கா தேவி தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் துர்கா தேவிக்கு குழந்தை பிறந்துள்ளது.
தங்களின் வாழ்க்கை சரியாக அமையவில்லையே என அடிக்கடி ராஜேஸ்வரி, துர்கா தேவியும் புலம்பி வந்துள்ளனர். இந்நிலையில் தங்கவேல் நேற்று காலை வெளியில் சென்று இருந்த நேரத்தில் தங்கள் குடும்ப வாழ்க்கை பாதிக்கப்பட்டதை நினைத்து மனமுடைந்த ராஜேஸ்வரியும், துர்கா தேவி தங்கள் குழந்தைகளுடன் கல்லணை கால்வாய் 20 கண் பாலம் பகுதிக்கு வந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.