தஞ்சாவூர்: தஞ்சாவூரில் தமிழ்நாடு அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, சாதனை படைத்த சான்றோர்களுக்குப் பெருமைப்படுத்தும் பெருவிழா ஆகியவை நடைபெற்றது.
காவேரி வண்டல் கலை இலக்கியக் கூடுகை சார்பில் நடந்த இவ்விழாவுக்கு தஞ்சாவூர் தொகுதி எம்.பி.,யும், காவேரி வண்டல் கலை இலக்கியக் கூடுகை கவுரவத் தலைவருமான ச. முரசொலி தலைமை வகித்தார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம், தமிழ் இணையக் கல்விக் கழக நெறியாளர் செந்தலை ந. கௌதமன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சியில் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுபெற்ற ஆசிரியர்கள் புதுக்குடி ஆதிதிராவிடர் நலப் பள்ளி செ. சந்திரஜோதி, வானரங்குடி ஆதிதிராவிடர் நலப் பள்ளி இ. ஹரிகிருஷ்ணன், அத்திவெட்டி அரசு பள்ளி பால சண்முகவேலன், கஞ்சனூர் இந்து பள்ளி சி. ராஜேஸ்வரி, துகிலி கஸ்தூரிபா காந்தி பள்ளி இரா. முத்தையன், திருவாய்ப்பாடி ஒன்றியப் பள்ளி ச. ராஜா, சேரன்குளம் அரசு பள்ளி கோ. கண்ணன், ஆலத்தூர் அரசு பள்ளி சி. மரகதம், பட்டுக்கோட்டை அரசு பள்ளி க. சுமித்ரா, பைவ் ஸ்டார் பள்ளி த. லதா, கும்பகோணம் நகரப் பள்ளி வெ. மோகன், பட்டீஸ்வரம் அண்ணா அரசு பள்ளி ஏ. சிவசங்கர், லெட்சுமாங்குடி ஒன்றியப் பள்ளி த. கருணாநிதி, மேலமறவக்காடு தேவி பள்ளி இரா. அன்புகொடி, மூவாநல்லூர் அரசு பள்ளி இரா. குபேந்திரன் ஆகியோர் பாராட்டப்பட்டு, விருதுகள் வழங்கப்பட்டன.
மேலும் மூத்தப் பத்திரிகையாளர் கோ. சீனிவாசனுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் விருது, திருமங்கலக்கோட்டை பள்ளிக்கு ரூ. 2 கோடி மதிப்பில் நிலம் வழங்கிய பொன். கோவிந்தராசுக்கு தமிழவேள் உமாமகேசுவரனார் விருது, தமிழக அரசின் இயற்கை வேளாண் ஆலோசனைக் குழு உறுப்பினர் கோ. சித்தருக்கு நம்மாழ்வார் விருது, தமிழக முதல்வரால் ஏரி மனிதர் என பாராட்டப்பட்ட நிமல் ராகவனுக்கு கரிகால்சோழன் விருது, திருவாலம்பொழில் முன்னோடி விவசாயி மா. ராமமூர்த்திக்கு நெல் ஜெயராமன் விருது, பார்க்கிங் பட இயக்குநர் பா. ராம்குமாருக்கு செவாலியர் சிவாஜிகணேசன் விருது ஆகியவை வழங்கப்பட்டன.
விழாவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) இ. மாதவன், காவேரி வண்டல் கலை இலக்கியக் கூடுகை தலைவர் சா. ஆசிப் அலி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, கூடுகை பொதுச் செயலர் இரா. செழியன் வரவேற்றார். ஆலோசனைக் குழு உறுப்பினர் பு. விசுவநாதன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் திரளானோர் கலந்து கொண்டு விருது பெற்ற ஆசிரியர்கள் மற்றும் சாதனைப்படைத்த சான்றோர்களை பாராட்டி ஊக்குவித்தனர்.
முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து நல்லாசிரியருக்கான ‘டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது’ வழங்கி தமிழக அரசு கவுரவப்படுத்தி வருகிறது. விருதாளர்களுக்கு ரூ.10,000 ரொக்கம், வெள்ளிப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். 1997-ம் ஆண்டு முதல் தமிழக அரசு நல்லாசிரியர் விருதை 'டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது' என்னும் பெயரில் வழங்கி வருகிறது. ஆசிரியா்களை ஊக்கப்படுத்தும் வண்ணம் தமிழக அரசு ஆண்டுதோறும் செப்டம்பா் 5 ஆம் நாளில் இதனை வழங்கி வருகிறது. இவ்வாறு தேர்வுபெற்ற ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில் தஞ்சாவூரில் இந்த நி்கழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.