தஞ்சாவூர்: கள்ளச்சாராயம் காய்ச்சுவது மற்றும் விற்பனையை தடுப்பது மற்றும் போதைப்பொருட்கள் ஒழிப்பது குறித்து தஞ்சாவூரில் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.


கள்ளச்சாராயத்தை தடுப்பது குறித்து ஆலோசனை


இதில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது மற்றும் போதைப்பொருட்கள் தடுப்பு பணியில் காவல் துறை, வருவாய்த்துறை ஊரக வளர்ச்சி துறை, மருத்துவத்துறை. உணவு பாதுகாப்புத் துறை மற்றும் செயல்படவும் தொடர்புடைய அறிவுரைகள் வழங்கப்பட்டது.


அரசு அலுவலர்கள் அடங்கிய குழு


மதுவிலக்கு அமலாக்கத்துறைகள் ஒருங்கிணைந்து அலுவலர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபடவும் மேற்படி கலந்தாலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனை செய்தல், கஞ்சா மற்றும் இதர பொதைப்பொருட்கள் விற்பனை செய்தல் ஆகியவற்றை கண்டறிந்து தடுத்திடும் பொருட்டு கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர், ஊராட்சி செயலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் முதல் அனைத்து துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து ஒரு குழு அமைப்பது.


போலீசாருக்கு தகவல் தெரிவிக்க அறிவுரை


ஒவ்வொரு கிராமத்திலும் கள்ளச்சாராயம் காய்ச்சுவது மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை செய்வது போன்ற நடவடிக்கைகளை தடுத்திடும் நோக்கில் உயர் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்திட வேண்டுமென உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டது. தொடர்புடைய கிராமத்தின் ஊராட்சி மன்றத்தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற துணைத்தலைவர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் இது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்திடவும் மாவட்ட நிர்வாகத்திற்கு உரிய தகவலினை அளித்து சமுக பாதுகாப்பு நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டது.


கண்காணிப்பு பணிகள் குறித்து அறிவுரைகள்


தஞ்சாவூர் மாவட்டத்தில் பொதுமக்களின் வீடுகளுக்கு அருகிலோ, பொது இடங்களிலோ, அல்லது கிராமத்தின் மறைவானப் பகுதிகளிலோ எவரேனும் கள்ளச்சாராயம் காய்ச்சினாலோ, அல்லது விற்பனை செய்தாலோ, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நபர்கள் நடமாடினாலோ, மற்றும் திருவிழா, திருமணம் மற்றும் இறப்பு செய்வதை தடுத்திடும் நோக்கில் உரியமுறையில் கண்காணித்திட வேண்டுமென அறிவுரைகள் வழங்கப்பட்டது.


வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வரும் கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் புழக்கத்தினை தடுத்திட காவல்துறையினர் மாவட்ட எல்லைச்சோதனை சாவடிகள் அமைத்து உரிய முறையில் கண்காணித்திடவும். இரயில் நிலையம், பேருந்து நிலையம், மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் கள்ளச்சாரயம் மற்றும் போதைப்பொருட்கள் புழக்கத்தினை தடுத்திட தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளவும். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் போதைப்பொருட்கள் விற்பனை செய்வதை தொடர்ந்து கண்காணித்து தடுத்திடவும். காவல் துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் அறிவுரைகள் வழங்கப்பட்டது.


கட்டணமில்லா தொலைபேசி


தஞ்சாவூர் மாவட்டத்தில் போதைப்பொருட்கள் மற்றும் கள்ளச்சாராயம் காய்ச்சுவது, விற்பனை செய்தல் போன்ற சட்ட விரோதமான நடவடிக்கைகளில் எவரேனும் ஈடுபடுவது தெரியவந்தால் பொதுமக்கள் புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண். 10581 அல்லது வாட்ஸ்அப் (Whatsapp செயலி எண். 9042839147 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தியின் வாயிலாக தகவல் தெரிவிக்கும்பட்சத்தில் உடனடியாக காவல்துறையின் மூலம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், தகவல் தெரிவித்திடும் நபர்களின் பெயர் மற்றும் விபரங்கள் இரகசியம் காக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.


மதுப்பாட்டில்கள் விற்பனை குறித்து கண்காணிப்பு


டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை மொத்த விற்பனை செய்வதை தடுத்திடும் பொருட்டு டாஸ்மாக் மேலாளர்கள் தொடர்ந்து கண்காணித்திடவும், அளவுக்கதிகமான மதுபாட்டில்கள் வைத்திருக்கும் நபர்களை கண்டறிந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது.