தஞ்சாவூர்: போட்டிப் போட்டு வந்த தனியார் பஸ்களை கண்டு மிரண்டு போய் அச்சத்தில் நடுரோட்டிலேயே கார் ஒன்று நிறுத்தப்பட்ட சம்பவம் கும்பகோணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தனியார் பஸ்களால் ஏற்படும் பெரும் அவதி
தஞ்சாவூர் மாவட்டத்தில் தனியார் பஸ்கள் இயக்கப்படும் வேகம் சாலைகளில் செல்லும் மற்ற வாகனங்களுக்கு கிலியை ஏற்படுத்தும். முந்திச் செல்வது, ஹாரனை அதிக சத்தத்துடன் எழுப்பி மற்ற வாகன ஓட்டுனர்களை மிரளச் செய்வது என பலவிதத்திலும் இடையூறு ஏற்படுத்தும் செயல்களை மேற்கொண்டு வருகின்றனர். முக்கியமாக கும்பகோணம், பட்டுக்கோட்டை செல்லும் பஸ்கள், டவுனுக்குள் இயக்கப்படும் மினி பஸ்கள் போன்றவற்றின் வேகமும், அதனால் ஏற்படும் விபத்து சம்பவங்களும் தொடர் கதையாகி வருகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தாலும் எவ்வித நடவடிக்கையும் கிடையாது. கண்டுக் கொள்வதும் கிடையாது. இதனால் பலமுறை தஞ்சாவூர்- கும்பகோணம் சாலையில் விபத்துக்கள் நடப்பது தொடர் கதையாகிறது.
பயணிகளை அலற விட்ட தனியார் பஸ்
இந்நிலையில், தஞ்சாவூர் இருந்து கும்பகோணம் நோக்கி டி.வி.எம்., செந்தில் என்ற இரண்டு தனியார் பஸ்கள் போட்டி போட்டுக் கொண்டு சென்றுக் கொண்டிருந்தன. அப்போது அம்மாபேட்டை வளைவில் அரசு டவுன் பஸ் ஒன்று சென்றுக்கொண்டு இருந்தது. அதன் பின்னால் சென்ற செந்தில் என்ற தனியார் பஸ் அரசு பஸ்சை முந்த முயன்றது. இரண்டு பஸ்களும் சாலையை அடைத்தவாறு சென்றன.
அச்சத்தில் நடுரோட்டில் நிறுத்தப்பட்ட கார்
அப்போது அதிவேகமாக வந்த டி.வி.எம்.,பஸ் இந்த இரண்டு பஸ்களையும் முந்திச் சென்றது. இதனால் அரசு மற்றும் தனியார் பஸ்சில் இருந்த பயணிகள் அச்சத்தில் அலறினர். இந்நிலையில் எதிர் திசையில் கும்பகோணத்தில் இருந்து தஞ்சை நோக்கி வந்த கார் ஒன்று வந்தது. மூன்று பஸ்களும் சாலையை அடைத்தவாறு வந்ததை கண்டு அச்சத்தில் நடு ரோட்டிலேயே காரை நிறுத்திவிட்டார். இதில் அரசு பஸ் மற்றும் செந்தில் என்ற தனியார் பஸ்சும் பிரேக் போட்டு நிறுத்தி விட, மற்றொரு தனியார் பஸ்சான டி.வி.எம். இரண்டு பஸ்களையும் சைட் போட்டு காரை விட்டு ஒதுக்கி சாலையிலிருந்து இறங்கி சென்றது. இதனால் கார் மற்றும் பஸ்களில் இருந்தவர்களுக்கு அதிர்ஷ்டவசமாக ஏதும் ஏற்படவில்லை.
சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ
இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பார்த்தவர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது தொடர்பான புகாரின் அடிப்படையில், கும்பகோணம் தாலுகா போலீசார், அந்த இரண்டு தனியார் பஸ்களை பறிமுதல் செய்தனர். மேலும் செந்தில் பஸ் டிரைவரான சோழிய விளாகம் பகுதியை சேர்ந்த ராஜேஷ்கண்ணண் (42), கண்டக்டரான சோழபுரம் பகுதியை சேர்ந்த சுதாகர்(42), டி.வி.எம்., பஸ் டிரைவரான தஞ்சாவூர், வடக்குப்பட்டு பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (39), கண்டக்டர் திருவாலாம்பொழிலைச் சேர்ந்த ராஜதுரை (36), ஆகிய நான்கு பேரையும் கைது செய்து, அவர்களின் லைசன்ஸ்களையும் ரத்து செய்து விசாரித்து வருகின்றனர்.