தஞ்சையில் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 2 பேர் கைது
தஞ்சை விளார் சாலையில் உள்ள சிந்துநகரில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 40 கிலோ எடை கொண்ட 76 மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் 3 ஆயிரத்து 40 கிலோ ரேஷன் அரிசி இருந்தது.

தஞ்சாவூர்: தஞ்சையில் 2 இடங்களில் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 4 டன் ரேஷன் அரிசியை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர். இது தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சை மாநகரில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி வீடுகளில் பதுக்கி வைத்து மீன்பண்ணை மற்றும் மாட்டு தீவனங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக தஞ்சை மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சியாமளாதேவி உத்தரவின் பேரில் தஞ்சை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அதன்படி தஞ்சை விளார் சாலையில் உள்ள சிந்துநகரில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 40 கிலோ எடை கொண்ட 76 மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் 3 ஆயிரத்து 40 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. இது தொடர்பாக தஞ்சை கீழவாசலை சேர்ந்த மணிவண்ணன் (38) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இதே போல் தஞ்சை டவுன் கரம்பையில் உள்ள எஸ்.டி.எம். நகரில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்று போலீசார் சோதனை செய்த போது 50 கிலோ எடை கொண்ட 21 மூட்டைகளில் 1050 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
அவற்றை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக தஞ்சை கீழவாசல் பூமால் ராவுத்தன் கோவில் தெருவை சேர்ந்த ரெங்கராஜ் மகன் பிரசாந்த் என்ற துரைராஜ் ( 23) என்பவரை கைது செய்தனர். இவர் டவுன்கரம்பை, கரந்தை, பள்ளியக்ரகாரம் உள்ளிட்ட பகுதிகளில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி மீன்பண்ணை மற்றும் கால்நடைகள் தீவனத்துக்கு அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட மணிவண்ணன், பிரசாந்த் என்ற துரைராஜ் ஆகிய 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதுபோன்று ரேஷன் அரிசியை தஞ்சையின் பல்வேறு பகுதியில் குறைந்த விலைக்கு வாங்கி மாவு மிஷின்களுக்கு அதிக விலைக்கு கொடுப்பது, மீன் பண்ணைகளுக்கு விற்பனை செய்வது போன்று பலரும் ஈடுபட்டு வருகின்றனர். இதை தடுக்க வேண்டும் என்பதற்காகவே குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவ்வாறு ரேஷன் அரிசி வாங்கி பதுக்கி விற்பனை செய்பவர்களை தொடர்ந்து கண்காணித்தும் வருகின்றனர். இவ்வாறு அவ்வபோது சிலர் கைது செய்யப்பட்டும் வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.























