தஞ்சாவூர்: விட்டேனா பார் என்று சினிமா காட்சிகள் போல் மணல் கடத்தி சென்ற மினிலாரியை ஒரு மணி நேரம் ஜீப்பில் சேஸிங் செய்து மடக்கிப் பிடித்துள்ளார் தாசில்தார். இந்த சம்பவம் தஞ்சை அருகே நடந்துள்ளது.
தஞ்சை அருகே மணல் கடத்திச்சென்ற மினிலாரியை ஒரு மணி நேரம் ஜீப்பில் விடாமல் விரட்டிச்சென்று தாசில்தார் மடக்கிப்பிடித்தார். மினி லாரி டிரைவர் இறங்கி தப்பி சென்று விட்டார். 20 கி.மீ. தூரம் நடந்த இந்த சேசிங் சம்பவம் சினிமா காட்சிகளை தாண்டி அமைந்தது. இப்படி அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட தாசில்தாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகாவில் உள்ளது ராராமுத்திரை கோட்டை கிராமம். இந்த கிராமத்தில் நேற்று வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்காக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் பாபநாசம் தாசில்தார் செந்தில்குமார் கலந்து கொண்டு கள ஆய்வினை மேற்கொண்டார்.
நிகழ்ச்சி முடிந்த பின்னர் தாசில்தார் செந்தில்குமார், மண்டல துணை தாசில்தார் பிரபு, வருவாய் ஆய்வாளர் கமலி, கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் ஆகியோர் ஜீப்பில் பாபநாசம் திரும்பிக்கொண்டிருந்தனர். ஜீப்பை டிரைவர் கணேஷ் ஓட்டிச்சென்றார். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றிக்கொண்டு ஒரு மினி லாரி வந்துள்ளது. திடீரென தாசில்தார் ஜீப்பை பார்த்ததும் மினி லாரியில் வந்தவர் அதிர்ச்சி அடைந்து மணல் கடத்தி வருவது தெரிந்து மினி லாரியை பிடிக்க வருகிறார் என்று நினைத்து அரசு ஜீப்பின் மீது மோதும் வகையில் வேகமாக வந்துள்ளார்.
சுதாரித்துக் கொண்ட ஜீப் டிரைவர் கணேஷ், லாவகமாக திருப்பினார். இதனால் ஜீப்பில் இருந்த தாசில்தார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மயிரிழையில் உயிர் தப்பி உள்ளனர். பின்னர்தான் தாசில்தார் மற்றும் அதிகாரிகள் மணல் கடத்திச்சென்ற மினி லாரியை பிடிக்க முயன்றனர். ஆனால் மினிலாரி நிற்காமல் வேகமாக சென்றது. உடனே தாசில்தாரும் அதிரடியாக ஜீப்பில் ஏறி லாரியை விரட்டிச்சென்றார். ஆனால் மினிலாரி ஜீப்பை முந்தவிடாமல் சென்று கொண்டிருந்தது. சினிமாவில் வரும் சேஸிங் காட்சி போல் இது இருந்துள்ளது. மேலும் மணல் கடத்தி வந்த மினி லாரியை தாசில்தார் பிடித்து விடாமல் இருக்கும் வகையில் ஜீப்புக்கு முன்னால் 2 பேர் இருசக்கர வாகனத்திலும் வழிவிடாமல் சென்றுள்ளனர்.
ஆனால் இதற்கெல்லாம் எனக்கு தூசி என்பது போல் தாசில்தார் தொடர்ந்து விரட்டியபடி சென்றார். சம்பவ இடத்தில் இருந்து 20 கி.மீ. தூரம் விரட்டிச்சென்று தஞ்சையை அடுத்த குளிச்சப்பட்டு கிராமத்தில் வைத்து மினி லாரியை தாசில்தார் உட்பட அதிகாரிகள் மடக்கிப்பிடித்தனர். உடன் மினி லாரியை ஓட்டி வந்தவர் இறங்கி தப்பி ஓடி விட்டார். இருசக்கர வாகனத்தில் வந்தவர்களும் தப்பிச்சென்றுவிட்டனர்.
பின்னர் மணல் கடத்தி வந்த மினி லாரியை கைப்பற்றி அம்மாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் தாசில்தார் மற்றும் அதிகாரிகள் ஒப்படைத்தனர். இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று இரவு நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பாபநாசம் தாசில்தாரின் இந்த அதிரடி நடவடிக்கை பொது மக்கள் மத்தியில் பாராட்டுக்களை குவித்து வருகிறது.