வருது... வருது... வீட்டுக்கே வருது: தஞ்சை மாநகராட்சியின் சிறப்பான செயல் - அப்படி என்ன செஞ்சாங்க?
தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை வீடுகளுக்கே சென்று வழங்கும் நடைமுறை நேற்று முதல் தொடங்கியுள்ளது.

தஞ்சாவூர்: வருது... வருது... உங்க வீட்டுக்கே வருது என்று தஞ்சாவூர் மாநகராட்சி பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வீடுகளுக்கே சென்று வழங்கும் நடைமுறையை மேயர் சண்.ராமநாதன் தொடக்கி வைத்தார். இது தஞ்சாவூர் மாநகராட்சியின் அடுத்த சிறப்பான செயல் என்று மக்கள் பாராட்டுகின்றனர்.
தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை வீடுகளுக்கே சென்று வழங்கும் நடைமுறை நேற்று முதல் தொடங்கியுள்ளது. தஞ்சாவூர் மாநகரில் 50-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளும், 6 அரசு மருத்துவமனைகளும் உள்ளது. இந்த மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கும், மருத்துவமனைகளில் இறப்பவர்களின் சான்றிதழ்களும் மாநகராட்சி சார்பில் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக மாநகராட்சி அலுவலகத்தில் உரிய ஆவணங்களோடு விண்ணப்பித்தால், 15 நாட்களுக்குள் அதற்கான சான்றிதழ் மாநகராட்சி சார்பில் நேரில் வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் பொதுமக்களின் இந்த அலைச்சலை தடுக்கும் வகையிலும், நேர விரயத்தை குறைக்கும் நல்ல எண்ணத்திலும் மாநகராட்சி நிர்வாகம் எடுத்தது சிறப்பான நடவடிக்கை. என்ன தெரியுங்களா?
பிறப்பு, இறப்பு சான்றிதழ் விண்ணப்பித்தவுடன் 7 தினங்களுக்குள் அவர்களது சான்றிதழ்கள் பதிவஞ்சலில் வீடுகளுக்கே சென்று சேரும் வகையில் புதிய நடைமுறையை நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார்.
அப்போது 30 பேருக்கு பிறப்புச்சான்றிதழ்கள் அஞ்சல்துறை ஊழியர்களிடம் மேயர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் க.கண்ணன், மாநகர நலஅலுவலர் நமச்சிவாயம், மண்டலக்குழுத் தலைவர்கள் புண்ணியமூர்த்தி, கலையரசன், ரம்யா சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் மேயர் சண்.ராமநாதன் நிருபர்களிடம் கூறியதாவது: தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு, அவர்கள் அலுவலகம் வந்து அலையாமல் இருப்பதற்காக புதிய நடைமுறையை தொடங்கியுள்ளோம். விண்ணப்பித்த 7 தினங்களுக்குள் பதிவஞ்சலில் இந்த சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்படும்.
அதே போல் வரும் ஏப்.1 ம் தேதி முதல் சொத்துவரி, பெயர் மாற்றம் மாநகராட்சியின் அனைத்து பிற சான்றிதழ்களும் பதிவஞ்சல் மூலம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாநகராட்சி நடப்பாண்டுக்கான சொத்துவரிவசூலில் முதல்நிலையை நோக்கி பயணித்து வருகிறது.
கடந்த மார்ச் 12 -ம் தேதி வரை ரூ.23 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில், ரூ.20.11 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. இது 92.3 சதவீதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து பொதுமக்கள் காத்திருக்கும் நிலையை மாற்றுவதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு தேவையற்ற அலைச்சல் மிச்சமாகிறது. மக்களின் சிரமத்தை குறைக்க இப்படி சிறப்பான நடவடிக்கையை மேற்கொண்ட மேயர் சண்.ராமநாதன் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தினருக்கு மக்கள் தங்களின் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். விண்ணப்பிக்க ஒரு முறை பின்னர் அதை வாங்க ஒரு முறை என்று அலைவது இப்போது தவிர்க்கப்பட்டுள்ளது.