டெல்டா மாவட்டத்தில் முதல்முறை... சிறுமியின் வளைந்த முதுகு தண்டுவடத்தை சீரமைத்து தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை சாதனை
ரெட் சிண்ட்ரோம் என்ற பிரச்சனையுடன் போராடி வந்த அந்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்ததன் மூலம் தஞ்சையைச் சேர்ந்த மீனாட்சி மருத்துவமனை ஒரு குறிப்பிடத்தக்க மருத்துவ சாதனையையே புரிந்துள்ளது.

தஞ்சாவூர்: தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் முதன்முறையாக 12 வயது சிறுமி ஒருவருக்கு வளைந்த முதுகுத் தண்டுவடத்தை சரி செய்வதற்கான அறுவை சிகிச்சையை நுணுக்கமாக வெற்றிகரமாக செய்து சாதனைப்படைத்துள்ளது தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை.
ரெட் சிண்ட்ரோம் என்ற பிரச்சனையுடன் போராடி வந்த அந்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்ததன் மூலம் தஞ்சையைச் சேர்ந்த மீனாட்சி மருத்துவமனை ஒரு குறிப்பிடத்தக்க மருத்துவ சாதனையையே புரிந்துள்ளது. இதுபோன்ற அதிநவீன அறுவை சிகிச்சை, தமிழகத்தின் டெல்டா பகுதியில் நடந்திருப்பது இதுவே முதன்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போதைய சிகிச்சையை அடுத்து, அச்சிறுமியின் முதுகுத்தண்டுவட நிலை முன்பை விட முன்னேறம் அடைந்துள்ளது. இதனால் அவரது தோற்றமும் மாறியிருக்கிறது. அவரது சுவாசமும் நன்கு தேறிவிட்டது. மேலும், இனி அவர் நன்கு நடமாடவும் முடியும்.
ஸ்கோலியாசிஸ் (Scoliosis) என்பது, அசாதாரணமான நிலையில் முதுகுத்தண்டுவடம் வளைந்த பிரச்சனை ஆகும். அதேபோல ரெட் சிண்ட்ரோம் (Rett syndrome) என்பது பெண் குழந்தைகளைத் தாக்கும் ஒரு பிரச்சனையாகும். நரம்புக் கோளாறான இது, மூளை வளர்ச்சியைப் பாதிக்கும் தன்மையுடையது. முதுகுத்தண்டுவடம் வளைந்த நிலையில் இருப்பதால் அச்சிறுமிக்குத் தொடர்ச்சியாக வலி இருந்துவந்தது. மூச்சுத்திணறலுடன் நடமாட்டத்திலும் தொந்தரவு இருந்தது. இவை எல்லாவற்றையும் ரெட் சிண்ட்ரோம், தீவிரப்படுத்திக்கொண்டிருந்தது.
சரியாக கவனித்து சிகிச்சையளிக்காவிட்டால் ஸ்கோலியாசிஸ் பிரச்சனை மேலும் முற்றி, அச்சிறுமியின் தோற்றத்தையே மாற்றிவிடும் அபாயம் இருந்தது. அது மட்டுமல்லாது, நுரையீரலின் வளர்ச்சியும் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறலை அதிகப்படுத்தும் வாய்ப்பும் இருந்துவந்தது.
இந்த வெற்றிகரமான அறுவை சிகிச்சை, முதுகுத்தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் எம்.கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.
எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர்களான மருத்துவர்கள் பார்த்திபன், சண்முகஹரி, பாலகுருநாதன், மயக்கவியல் துறை முதுநிலை நிபுணர்களான மருத்துவர்கள் ஜி.அரிமாணிக்கம், வினோதா தேவி ஆகியோரை உள்ளடக்கிய குழுவினர் இந்த சிகிச்சையை மேற்கொண்டனர். அறுவை சிகிச்சை மேற்கொண்ட குழு, இன்ட்ரா ஆப்பரேட்டிவ் நியூரோ மானிட்டரிங் எனும் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருக்கிறது. இதன் உதவியால் அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருக்கும்போதே நோயாளியின் முதுகுத் தண்டுவடம் மற்றும் நரம்புகள் ஆகியவற்றின் தங்கு தடையற்ற இயக்கம் கண்காணிக்கப்பட்டது. அதன்மூலம் இந்த அறுவை சிகிச்சை பாதுகாப்பானதாகவும் துல்லியமானதாகவும் அமைந்துவிட்டது.
அறுவை சிகிச்சைக்குப் பின்பு நோயாளி பழைய தெம்பைப் பெறவும் நடமாடவும் இம்மருத்துவமனையில் இயன்முறை மருத்துவக் குழு (physiotherapy team) சிறப்பாக செயலாற்றியுள்ளது. தற்போது அச்சிறுமியின் உடலமைப்பு முறையில் நல்ல மாற்றம் விளைந்திருக்கிறது. அதனால் அவரால் எளிதாக நடமாட முடிவதுடன் சுவாசமும் மேம்பட்டிருக்கிறது. ஓராண்டுக்குப் பிறகு, அவர் மிகவும் சிறப்பாக குணமடைந்துவிட்டார்.
இதுகுறித்து தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை தலைவர் மருத்துவர் எஸ். குருசங்கர் கூறுகையில், 12 வயது நிரம்பிய நோயாளி ஒருவருக்கு முதுகுத் தண்டுவடத்தில் ஏற்பட்ட வளைவு காரணமாக அவரது உடல் நலமும் வாழ்க்கைத் தரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தன. ஆனால், தற்போதைய அறுவை சிகிச்சையின் மூலமாக, வளைவான முதுகுத் தண்டுவட பிரச்சனை சரி செய்யப்பட்டிருக்கிறது. அப்பிரச்சனையால் அவருக்கு ஏற்பட்டு வந்த அசெளகரியத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது. அவரது சுவாசமும் மேம்பட்டிருப்பதுடன் தற்போது நன்றாக நடமாடவும் முடிகிறது. இந்த சிக்கலான அறுவை சிகிச்சைக்காக நாங்கள் இன்ட்ரோ ஆப்பரேட்டிவ் நியூரோ மானிட்டரிங் எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருக்கிறோம். அதன் வாயிலாக, அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருக்கும்போது நரம்புகளுக்கு ஏதேனும் சேதாரங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் கண்காணிக்க முடிந்திருக்கிறது. ஸ்கோலியாசிஸ் எனப்படும் வளைந்த முதுகு தண்டுவட பிரச்சனை என்பது வழக்கமாக காணப்படுவதுதான் என்றாலும் கிராமப்புறங்களில் விழிப்புணர்வு இல்லாததாலும் போதுமான அளவுக்கு பரிசோதனை முறைகள் இல்லாததாலும் கண்டுகொள்ளப்படாமல் விட்டுவிடப்படுகிறது.
தொடக்க நிலையிலேயே இவற்றைக் கண்டறிந்துவிட்டால் பிரேசஸ் அல்லது முதுகுக்கு ஆதரவான பெல்ட் ஆகியவற்றின் மூலமே பிரச்சனையை சரி செய்துவிட முடியும். அறுவை சிகிச்சை வேண்டியிருக்காது. பிரச்சனை தொடர்பாக சிறிய சந்தேகம் இருந்தாலும்கூட உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற்றால், உரிய நேரத்தில் சிகிச்சை பெற அது ஏதுவாக இருக்கும்” என்றார்.
முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் கார்த்திகேயன் கூறுகையில், முதுகுத்தண்டுவடம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் அறுவை சிகிச்சை மூலமோ அல்லது அறுவை சிகிச்சை இல்லாமலோ குணப்படுத்த இது சிறப்பு வாய்ந்த பிரிவாகும். தற்போதைய அறுவை சிகிச்சையின்பொழுது நோயாளியின் முதுகுத்தண்டுவடத்தில் ஏற்பட்டிருந்த வளைவை, மருத்துவப் பயன்பாட்டுக்கான உலோகத் துண்டு, தனித்துவமான திருகாணிகள் ஆகியவற்றைப் பொருத்தி சரி செய்தோம். இவற்றை மறுபடி எடுக்க வேண்டியதில்லை. இந்த அறுவை சிகிச்சையை அடுத்து நோயாளிகள் தங்களது தினசரி நடவடிக்கைகளை இயல்பாக (விளையாட்டுக்கள் உட்பட) தொடர்ந்து செய்யலாம். ரெட் சிண்ட்ரோம் பிரச்சனை இருந்ததால் அது அறுவை சிகிச்சையில் சிக்கல்களை உருவாக்கியது. இந்நிலையில் நோயாளி வழக்கமான சிறுமி இல்லை என்பதால் நாங்கள் ஐஓஎன்எம். தொழில்நுட்பத்தின் மூலம் அதிகபட்சமான பாதுகாப்பு தர நெறிமுறைகளை பின்பற்றினோம் என்றார்.
நிகழ்ச்சியின் போது தஞ்சை மீனாட்சி மருத்துவமனையின் துணை மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர்.வி.பிரவீன் உடனிருந்தார்.





















