தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாதனை: ஆபத்தான ரத்த நாள அறுவை சிகிச்சை வெற்றி! இலவச சிகிச்சை மூலம் உயிர் காப்பு!
முதல் முறையாக சிக்கலான ரத்த நாள அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து தஞ்சை மருத்துவர்கள் சாதனை.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக சிக்கலான ரத்த நாள அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர் ரமேஷ் குமார் (50). இவர் மீனவர் தொழில் செய்து வருகிறார். இவருக்கு கடந்த சில தினங்களாக தீராத முதுகு வலி வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் இருந்து வந்துள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு இவரை பரிசோதித்த மருத்துவர்கள் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லுமாறு பரிந்துரை செய்தனர். அதன் பேரில் ரமேஷ் குமார் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவரை அணுகி தனக்குள்ள பிரச்சனையை கூறியுள்ளார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு சிடி ஸ்கேன் எடுத்து பார்த்து உள்ளனர். அதில் அவரின் நெஞ்சு மற்றும் வயிற்று பகுதியில் உள்ள பெருந்தமனி இரத்தக்குழாய் வீங்கி வெடிக்கும் அபாய நிலையில் உள்ளது கண்டறியப்பட்டது. பொதுவாக 5.5 சென்டிமீட்டர் அளவில் தான் இருக்க வேண்டும். ஆனால் இவருக்கு 9.9 சென்டிமீட்டர் அளவு இருந்துள்ளது. எனவே இதனை சரி செய்ய இரண்டு கட்டமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று ரத்தக்குழாய் மருத்துவர்கள் குழு ஆலோசித்து முடிவு செய்தனர்.
அதன் பேரில் தஞ்சை மருத்துவக் கல்லூரி முதல்வர் பூவதி தலைமையில் ரத்த நாள அறுவை சிகிச்சை துணைத் தலைவர் மருத்துவர் சண்முக வேலாயுதம் மற்றும் மயக்கவியல் மருத்துவத்துறை தலைவர் மருத்துவர் சாந்தி பால்ராஜ் தலைமையில் மருத்துவர்கள் தேவராஜன் மோகன் ராஜா முரளி ஜெயராணி கரிகாலன் சாரு பிரபா ஆகியோர் இரண்டு கட்டங்களாக அறுவை சிகிச்சை மற்றும் ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொண்டனர். முதல் கட்ட அறுவை சிகிச்சை சுமார் 6 மணி நேரமும், இரண்டாம் கட்ட அறுவை சிகிச்சை சுமார் 3 மணி நேரமும் நடந்துள்ளது. முதல் கட்டமாக கல்லீரலில் இரண்டு சிறுநீரகங்கள் குடலுக்கு செல்லும் ரத்த ஓட்டம் மாற்றி அமைத்து சீரமைக்கப்பட்டது.
அதன் பின்னர் இரண்டாம் கட்டமாக ஆஞ்சியோ முறையில் ஸ்டென்ட் பொருத்தப்பட்டது. சிகிச்சைக்கு பின் அவர் பூரண சுகாதாரத்துடன் உள்ளார். இந்த சிக்கலான அறுவை சிகிச்சை மிக சில மருத்துவமனைகளில் மட்டுமே மேற்கொள்ள முடியும். மேலும் தனியார் மருத்துவமனையில் இந்த சிகிச்சை செய்ய ரூபாய் பத்து முதல் 15 லட்சம் வரை செலவாகும். ஆனால் இந்த சிகிச்சை ஆனது முழுமையாக முதலமைச்சரின் நிர்வான காப்பீடு திட்டம் மற்றும் சிறப்பு மூலதன நிதியின் மூலம் இலவசமாக அவருக்கு மேற்கொள்ளப்பட்டது. முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் ரூ. 1.50 லட்சமும், சிறப்பு மூலதான நிதியின் மூலம் ரூ. 8 லட்சமும் இவருக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டது.
இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் பூவதி கூறுகையில், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு அதிநவீன சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. தஞ்சை மருத்துவக் கல்லூரியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் இங்கு வந்து பயன் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் நாகப்பட்டினத்தை சேர்ந்த ரமேஷ் குமாருக்கு குழாய் வீங்கி வெடிக்கும் நிலையில் இருந்தது. அவருக்கு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மிகச் சிறப்பான முறையில் அறுவை சிகிச்சை செய்து அவர் தற்போது குணமடைந்து உள்ளார். அவருக்கு ஸ்டன்ட் பொருத்தப்பட்டுள்ளதால் அவர் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார்.
இந்த மருத்துவ சிகிச்சை வெளி மருத்துவமனையில் செய்திருந்தால் சுமார் 20 லட்சம் வரை அவருக்கு செலவாகி இருக்கும். தமிழக அரசு உதவியுடன் காப்பீடு திட்டத்தில் அவருக்கு முழுவதும் இலவசமாக சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. தற்போது அவர் பூர்ண குணமடைந்து உள்ளார். தற்போது தஞ்சை மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100 பெட்டுகளும் தஞ்சாவூர் அரசு ராஜா மிராசுதாரர் மருத்துவமனையில் 50 பெட்டுகளும் தயார் நிலையில் உள்ளது.
இதுவரை தஞ்சை மாவட்டத்தில் யாருக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை. அதேபோல் தற்போது பண்டிகை காலம் என்பதால் தீக்காயங்கள் ஏற்பட்டால் சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவ குழுவும் தயார் நிலையில் உள்ளது. தீக்காயங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டால் அனைத்து மருத்துவர்களும் பணிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.




















