தஞ்சாவூர்: மேட்டூர் அணையைத் திறப்பதற்குள் தூர் வாரும் பணியை முழுமையாக முடிக்க வேண்டும் என்று தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். 


மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:


அம்மையகரம் ஏ.கே.ஆர். ரவிச்சந்தர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் கல்லணை, திருச்சென்னம்பூண்டி, மருவூர், சாத்தனூர், கோதங்குடி, கோவிந்தநாட்டுச்சேரி ஆகிய 6 இடங்களில் மணல் குவாரி திறக்கப்பட்டுள்ளது. 4 மணல் குவாரிகள் கல்லணை அருகிலேயே இயங்குவதால், கல்லணையின் கட்டுமானத்துக்கு பாதிப்பு ஏற்படும். இந்த மணல் குவாரிகளை ரத்து செய்ய வேண்டும். 


கலெக்டர்: தூர் வாரும் பணியில் மொத்தமுள்ள 1,068 கி.மீ.}இல், 891 கி.மீ. முடிவடைந்துள்ளது. மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பாக அனைத்து பணிகளும் முடிக்கப்படும்.


ஆம்பலாப்பட்டு ஆ. தங்கவேல்: நிலத்தின் தன்மை அறிந்து சாகுபடி செய்தால், நிறைய விளைச்சல் கிடைக்கும். அதற்கு ஏதுவாக மண் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.


வேளாண் துறை இணை இயக்குநர் நல்லமுத்து ராஜா: நடமாடும் மண் பரிசோதனை ஊர்திக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.


திருவோணம் வி.கே. சின்னதுரை: மேட்டூர் அணை ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்படவுள்ள நிலையில், பல இடங்களில் இன்னும் தூர் வாரும் பணி முடிக்கப்படாமல் உள்ளது. இப்பணியை முழுமையாகச் செய்ய வேண்டும். 


சுவாமிமலை சுந்தர. விமல்நாதன்: மேட்டூர் அணை ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்படுவதற்கு முன்பாக வேளாண் துறை, கூட்டுறவுத் துறை, நீர்வளத் துறை ஆகியவற்றின் மாநில உயர் அலுவலர்கள், விவசாயிகள் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூரில் நடத்தப்பட வேண்டும்.




பாபநாசம் கே.எஸ். முகமது இப்ராஹிம்: மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பாக கல்லணை, கொள்ளிடம், குடமுருட்டி ஆறுகளில் தூர் வாரும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.


நரியனூர் பி. செந்தில்குமார்: திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை விவகாரத்தில் விவசாயிகளின் பெயரில் ஆலை நிர்வாகம் மோசடியாகப் பெற்ற வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.


கலெக்டர்: கடன் தள்ளுபடி தொடர்பாக மாநில அளவில் விரைவில் நடைபெறவுள்ள வங்கியாளர்கள் கூட்டத்தில் விவாதப் பொருள் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு விவாதங்கள் நடந்தது.


இதனிடையே, பயிர்க் கடனைத் திரும்பச் செலுத்தும் கால அவகாசத்தை ஓராண்டாக மாற்றி அமைக்க வேண்டும். தூர் வாரும் பணியை உரிய காலத்தில் முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பு) வடக்கு மாவட்டத் தலைவர் ஆர். செந்தில்குமார் தலைமையில் விவசாயிகள் நெற்றியில் நாமமிட்டும், கையில் நெற்கதிர்களை ஏந்தியும் முழக்கங்கள் எழுப்பியவாறு கலெக்டரிடம் மனு அளித்தனர்.


மேலும், கடந்த 2011 முதல் 2018 ஆம் ஆண்டு வரை வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கி, கூட்டுறவு கடன், கல்விக் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், தற்கொலையிலிருந்து காப்பாற்ற கோரியும் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத் துணைத் தலைவர் கக்கரை ஆர். சுகுமாரன் தலைமையில் விவசாயிகள் கழுத்தில் தூக்குக் கயிறு மாட்டிக் கொண்டு, முழக்கங்கள் எழுப்பியவாறு மனு அளித்தனர்.