தஞ்சாவூர்: தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சண்.ராமநாதன் கூட்டுறவு காலனியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் முதல்நபராக தனது வாக்கினை பதிவு செய்தார். தொடர்ந்து அவரது குடும்பத்தினரும் வாக்குப்பதிவு செய்தனர். அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் காலையிலேயே மக்கள் ஆர்வத்துடன் வந்து தங்களின் வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கடந்த சில நாட்களாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு பிரச்சாரம் ஓய்ந்த நிலையில் தஞ்சாவூர், திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், ஒரத்தநாடு, பேராவூரணி, பட்டுக்கோட்டை ஆகிய தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதல் வாக்காளர்கள் தங்களின் வாக்கினை வரிசையில் நின்று பதிவு செய்து வருகின்றனர். தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சண்.ராமநாதன் கூட்டுறவு காலனியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் முதல்நபராக தனது வாக்கினை பதிவு செய்தார். தொடர்ந்து அவரது குடும்பத்தினரும் வாக்குப்பதிவு செய்தனர். இதேபோல் திருவையாறு தொகுதி திமுக வேட்பாளர் துரை.சந்திரசேகரன் கண்டியூரில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார். தஞ்சாவூர் எம்.பி.,முரசொலி தென்னங்குடியில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
குந்தவை நாச்சியார் கல்லூரியில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தனது வாக்கினை பதிவு செய்தார். இங்கு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் அரைமணிநேரம் தாமதம் ஏற்பட்டது. இதேபோல் திருவையாறு தொகுதி பூதலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பாகம் எண் 260ல் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால் அரை மணி நேரம் தாமதத்துடன் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய இன்று காலை 7 மணி அளவில் வாக்கு சாவடியில் நீண்ட வரிசையில் நின்று வாக்கு பதிவுகளை ஆர்வமாக செலுத்தி வருகின்றனர்.
முக்கிய கட்சிகளின் சார்பில் பல்வேறு வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். திருவிடைமருதூர் தொகுதியில் மொத்தம் 14 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். திமுக சார்பில் அமைச்சர் கோவி செழியன், அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ இளமதி சுப்பிரமணியன்,நாம் தமிழர் கட்சி சார்பில் திவ்யபாரதி, தவெக சார்பில் பிரபாகரன், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் புரட்சிமணி உள்ளிட்ட 14 பேர் போட்டியிடுகின்றனர்.வாக்கு பதிவு இயந்திரத்தில் 15-வது இடத்தில் ‘நோட்டா’ இடம்பெற்றுள்ளது.
திருவிடைமருதூர் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,56,930 ஆகும்.இதில் ஆண் வாக்காளர்கள் 1,26,222 பேரும்,பெண் வாக்காளர்கள் 1,30,700 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 8 பேரும் அடங்குவர்.மொத்தம் 326 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 13 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். திமுக சார்பில் அன்பழகன், த.மா.க சார்பில் அசோக் குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் ஆனந்த், த.வெ.க சார்பில் வினோத்,(பாமக) ராமதாஸ் அணியிலிருந்து ம.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.
இந்தத் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,23,507, பெண் வாக்காளர்கள் 1,30,796 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 15 பேர் என மொத்தம் 2,54,318 வாக்காளர்கள் உள்ளனர். இதுபோல் பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் ஏ.எம்.ஷாஜகான் (ஐயுஎம்எல்), சண்முகபிரபு (அஇஅதிமுக),அசாருதீன் (த.வெ.க) அனீஸ் பாத்திமா (நாதக) உள்ளிட்டோர் 13 பேர் போட்டியிடுவதால் பலமுனைப் போட்டி நிலவுகிறது.மேலும் பல சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.இந்தத் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,56,518 ஆகும். இதில் ஆண் வாக்காளர்கள் 1,24,740 பேரும், பெண் வாக்காளர்கள் 1,31,755 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 23 பேரும் உள்ளனர்.
இதனையடுத்து களத்தில் உள்ள வேட்பாளர்கள் அமைச்சர் கோவி. செழியன் சோழபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், எம்.எல்.ஏ அன்பழகன் சாக்கோட்டை தொடக்கப் பள்ளியிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் ஷாஜஹான் ஆடுதுறை கிருஷ்ணன் கோயில் தொடக்கப்பள்ளியிலும் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
வாக்குச்சாவடியில் காலை முதலே முதியவர்கள், இளைஞர்கள், பெண்கள், முதல்முறை வாக்காளர்கள் என ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் குடிநீர் வசதிகள் செய்யப்பட்டிருந்தன.அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது.
