தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் 1420 ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. மழை நீடித்தால் இளம் நாற்றுகள் அழுகும் அபாயம் ஏற்படும் என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஒரு சில பகுதிகளில் கனமழையும், சில பகுதிகளில் மிதமான மழையும் பெய்து வருகிறது. இதில் இன்று காலை முதல் சாரல் மழையாக பெய்து வருகிறது. இந்த தொடர் மழையால் தாழ்வான இடங்களில் நெற் பயிர்கள் மூழ்கியுள்ளன. மழை தொடர்ந்து பெய்து வருவதால் வயல்களில் தேங்கியுள்ள தண்ணீர் வடிய முடியாத நிலை உள்ளது.
பெரியகோவிலை சுற்றி பார்க்க தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வருவது வழக்கம். கடந்த சில நாட்களாக அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை முதல் தஞ்சை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. மதியம் 2 மணி வரை தொடர்ந்து மழை கொட்டியது. இதனால் பெரிய கோவிலில் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வழக்கத்தை விட குறைவாகவே காணப்பட்டது. ஒரு சில பக்தர்கள் குடைபிடித்தபடி வந்து சாமி தரிசனம் செய்தனர். மாலை 4 மணி வரை பெரிய கோவிலில் பக்தர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக தான் இருந்தது. வெளி மாவட்டம் மற்றும் மாநிலத்திலிருந்து வரும் பக்தர்களும் மழையின் காரணமாக வரவில்லை.