தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர்கள், விவசாயிகள், சொந்த தொழில் புரிபவர்கள் என்று 34 பேரிடம் கடந்த பல நாட்களாக சமூக வலைதளங்கள் வாயிலாக சுமார் ரூ.1.50 கோடி அளவில் மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி நன்மைக்கு பயன்படுவதை காட்டிலும் தீமைக்கே அதிகம் துணையாகிறது. அந்த வகையில் சமூக வலைதளங்கள் வாயிலாக ஆன்லைன் டிரேடிங், ஆன்லைன் ஜாப், வங்கியிலிருந்து பேசுகிறோம் கேஒய்சி சரிபார்த்தல், நாங்கள் கூறும் டாஸ்கை முடித்தால் அதிக லாபம் என்ற பெயரில் ஆசை வார்த்தை காட்டி லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்யும் மோசடி நபர்கள் அதிகரித்து வருகின்றனர்.
இதுபோன்ற மோசடியில் தஞ்சாவூர் நகர் பகுதி, கும்பகோணம் மற்றும் சுற்றுப்புறங்களை சேர்ந்த தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், விவசாயிகள், வேலை தேடுபவர்கள், எலக்ட்ரிக்கல் காண்ட்ராக்டர், பார்ட் டைம் ஜாப் தேடுபவர்கள் என சுமார் 34 பேர் தங்களை வாட்ஸ் அப், டெலிகிராம், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் தொடர்பு கொண்டு பணம் மோசடி செய்ததாக கடந்த 10 நாட்களாக தஞ்சாவூர் சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்தனர். இதன்படி ஒவ்வொரு நபரிடம் இருந்தும் சுமார் 5 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை ஆசை வார்த்தை கூறி சுமார் ரூ.1.50 கோடி வரை மோசடி நடந்துள்ளது.
இவ்வாறு வந்த புகார்களின் அடிப்படையில் தஞ்சாவூர் சைபர் க்ரைம் போலீசார் நேற்று முன்தினம் 34 வழக்குகள் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் தரப்பில் கூறுகையில், நிதி மோசடி, போலி செயலிகள், சமூக வலைதள மோசடிகள், ஆன்லைன் டிரேடிங்கில் டெபாசிட் செய்ய சொல்வது போன்ற குற்றங்களைத் தடுக்க, 1930 என்ற உதவி எண்ணுடனும், cybercrime.gov.in இணையதளத்துடனும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
முக்கியமாக, அறியாத அழைப்புகளை ஏற்காமல் இருப்பது, தனிப்பட்ட தகவல்களைப் பகிராமல் இருப்பது, போலி இணைப்புகளை (Links) கிளிக் செய்யாமல் இருக்க வேண்டும். மேலும் வங்கியிலிருந்து பேசுகிறோம் ஓடிபி வந்து இருக்கும் என்று வரும் அழைப்புகளை நம்பி ஏமாறக்கூடாது என்று பல்வேறு வகையிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இருப்பினும் பொதுமக்கள் இதில் இன்னும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இதுபோன்ற ஆன்லைன் மோசடிகளை உணர்ந்து செயல்பட வேண்டும். ஏடிஎம் ரகசிய எண்களை தெரிவிப்பது போன்ற செயல்களை செய்யக்கூடாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
