அடிக்கடி குடிபோதையில் தகராறு செய்த அண்ணன்... ஆத்திரத்தில் தம்பி செய்த காரியம்
இருவருக்கும் தகராறு முற்றியதில் அண்ணன் அஜித்குமாரை, ராம்குமார் அடித்து கீழே தள்ளி உள்ளார். இதில் கீழே விழுந்து பலத்த காயமடைந்த அஜித்குமார் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே குடிபோதையில் அடிக்கடி தகராறு செய்து வந்த அண்ணனை அடித்து கொலை செய்து செப்டிங் டேங்கில் தூக்கி வீசிய தம்பி போலீசில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே நடுக்காவேரி அரசமர தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி விஜயா. இந்த தம்பதியின் மகன் அஜித்குமார் (27) டிப்ளமோ படித்தவர். கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவரது தம்பி ராம்குமார் (25) பைக் மெக்கானிக். இவர்களுக்கு இரண்டு தங்கைகள் உள்ளனர். அதில் ஒருவருக்கு திருமணமாகி விட்டது. தந்தை ராஜா இறந்து விட்டதால் அம்மா விஜயாவுடன் இளைய தங்கையுடன் திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார்.

அஜித்குமார் கிடைக்கும் வேலைகளை செய்து வந்துள்ளார். தற்போது எந்த வேலையும் இல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தொடர்ந்து குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்துள்ளார். மேலும் அக்கம்பக்கத்தினருக்கு அஜித்குமாரால் சங்கடங்கள் இருந்து வந்துள்ளது. இதனால் அண்ணன் அஜித்குமாரை, தம்பி ராம்குமார் அடிக்கடி கண்டித்து வந்துள்ளார்.. இந்நிலையில் நேற்று முன்தினம் அஜித்குமார் குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அன்று இரவும் இது தொடர்பாக அண்ணனை ராம்குமார் கண்டித்துள்ளார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன அழுத்தம் ஏற்பட்டு ராம்குமார் ஆத்திரமடைந்துள்ளார்.
இருவருக்கும் தகராறு முற்றியதில் அண்ணன் அஜித்குமாரை, ராம்குமார் அடித்து கீழே தள்ளி உள்ளார். இதில் கீழே விழுந்து பலத்த காயமடைந்த அஜித்குமார் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். இதில் அதிர்ச்சியடைந்த ராம்குமார் தனது அண்ணன் அஜித்குமார் உடலை வீட்டில் உள்ள செப்ட்டி டேங்கில் தூக்கி போட்டுள்ளார். பின்னர் நேற்று நடுக்காவேரி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று நடந்த விபரங்களை கூறி தன் அண்ணனை கொலை செய்து விட்டதாக தெரிவித்து சரணடைந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த டிஎஸ்பி அருள்மொழி அரசு, இன்ஸ்பெக்டர் பார்த்திபன், சப்இன்ஸ்பெக்டர் முகமதுநிவாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செப்டிக் டேங்கில் இருந்து அஜித்குமார் உடலை மீட்டு திருவையாறு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் தட அறிவியல் நிபுணர் ராமச்சந்திரன், கைரேகை நிபுணர் மோகன்தாஸ் ஆகியோர் ரேகைகளை பதிவு செய்தனர்.
மேலும் இதுகுறித்து நடுக்காவேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராம்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் திருவையாறு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





















