13 ஆண்டு பகை.. 20 இடங்களில் சகோதரியின் கணவரை வெட்டிய அண்ணன் - நடந்தது என்ன?
இருவரும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு, காதல் திருமணம் செய்துக்கொண்டு, சொந்த ஊரை விட்டு வெளியேறி, திருவோணம் பகுதியில் வசித்து வந்தனர்.

தஞ்சாவூர்: காதலித்து திருமணம் செய்துக்கொண்ட நிலையில் 13 ஆண்டுக்கு பின்னர் ஊருக்கு திரும்பிய வாலிபரை 20க்கும் அதிகமான இடங்களில் சரமாரியாக வெட்டி சாய்ந்துள்ளார் மனைவியின் சகோதரர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே எட்டுபுளிக்காடு பகுதியை சேர்ந்த கலியமூர்த்தி (32), கூலி தொழிலாளி. இவரது மனைவி மகாலட்சுமி(28). இவர்கள் இருவரும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு, காதல் திருமணம் செய்துக்கொண்டு, சொந்த ஊரை விட்டு வெளியேறி, திருவோணம் பகுதியில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, கலியமூர்த்தியும், மகாலட்சுமியும் எட்டுபுளிக்காடு கிராமத்திற்கு சென்று இருந்தனர். இதையடுத்து கடந்த ஒரு வாரமாக மகாலட்சுமியின் சகோதரரான முருகானந்தத்திடம் கலியமூர்த்தி தகராறு செய்து வந்துள்ளார். மேலும் நேற்றுமுன்தினம் காலை கலியமூர்த்தி தனது குழந்தைகளுடன் வெளியே சென்ற போது, முருகானந்திற்கும் – கலியமூர்த்திக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், முருகானந்தம் (25), தனது உறவினர்களான செந்தில்குமார் (32), வீரமுத்து (34), ஆகியோருக்கு தகவல் அளித்தார். அங்கு வந்த செந்தில்குமார், வீரமுத்து, முருகானந்தம் ஆகிய மூவரும் சேர்ந்து, கலியமூர்த்தியை சரமாரியாக வெட்டினர். 20க்கும் அதிகமான வெட்டுகள் விழுந்துள்ளது.
இதில், பலத்த காயமடைந்த கலியமூர்த்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தலையில் ஒன்பது இடங்களில் வெட்டுக் காயமடைந்த நிலையில், உயிருக்கு ஆபத்தான சூழலில், கலியமூர்த்தி சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, முருகானந்தம், செந்தில்குமார் ஆகிய இருவரையும் நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து கலியமூர்த்தி மனைவி மகாலட்சுமி நிருபர்களிடம் கூறியதாவது: நாங்கள் இருவரும் ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள். நான் வசதியான வீட்டு பெண், எனது கணவர் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர். வீட்டின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டோம். 13 ஆண்டுகளாக பகையை வைத்து கொண்டு எனது கணவரை வெட்டியுள்ளார். வெட்டியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றார்.





















